
சென்னை,
நடிகர் கவுதம் கார்த்திக் கடல் படத்தில் அறிமுகமாகி தன் அடுத்தடுத்த படங்களில் மினிமம் பட்ஜெட் நாயகனானார். வை ராஜா வை, ரங்கூன், ஆகஸ்ட் 16 ,1947, பத்து தல உள்ளிட்ட படங்கள் வெற்றிப்படமாகின. இதற்கிடையே, நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்துகொண்டார்.
'நாளைய இயக்குநர் சீசன் 1' மூலம் கவனத்தை ஈர்த்த சூரியபிரதாப் 'ரூட் - ரன்னிங் அவுட் ஆப் டைம்' படத்தை இயக்குகிறார். ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' படத்தில் அசோசியேட் டைரக்டராக பணியாற்றியவர். வெரஸ் புரொடக்ஷன்ஸ் தனது முக்கிய படமான 'ரூட் - ரன்னிங் அவுட் ஆப் டைம்' எனும் புதிய கிரைம் திரில்லரை அறிவித்துள்ளது.
'ரூட்' என்பது அறிவியல் புனைகதை மற்றும் கிரைம் திரில்லர் கதைகளுடன் உணர்வுபூர்வமான ஆழத்தை இணைக்கும் புதிய முயற்சியாகும். படத்தின் முதன்மை கதாநாயகனாக கவுதம் கார்த்திக் நடிக்கிறார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவரின் இந்த புதிய முயற்சி எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் உள்ளது. நடிகை பவ்யா திரிகா, கவுதம் ராம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். பவ்யா திரிகா 'ஸ்ட்ரீ 2' படம் மூலம் பிரபலமானவர்.இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில், பாலிவுட் பிரபல நடிகர் அபார்ஷக்தி குரானா நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் அபார்ஷக்தி குரானா தமிழில் அறிமுகமாகிறார்.

இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. இந்தப் படம், அறிவியல் கற்பனையும், உணர்ச்சியைப் பிணைந்து கலந்த ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லராக உருவாகிறது.
இயக்குநர் சூரியபிரதாப் கூறுகையில்," 'ரூட்' எனும் இந்தக் கதை ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஒரு முக்கியமான கனவுப் பிராஜெக்ட். ஒரு கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் அமைந்த கிரைம் திரில்லரை, அறிவியல் பின்னணியுடன், உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களோடு சேர்த்து உருவாக்கும் முயற்சி தான் இந்த படம். கவுதம் ராம் கார்த்திக், கதாபாத்திரத்தின் ஆழத்தை உணர்ந்து காவல் அதிகாரியாக முழு ஈடுபாட்டையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அபார்ஷக்தி குரானா, தமிழில் தனது முதல் படத்திற்கே மிக உயர்ந்த செயல்திறன் கொண்ட நடிகராக உருவெடுக்கிறார்" என்றார்.