
சென்னை,
கவர்னர் அதிகாரம் என்பது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே தபால்காரராக இருப்பது மட்டுமே என்று ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், "ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் சட்டமியற்றும் அதிகாரம் மிக்கது. நியமனப் பதவியான கவர்னர் பதவி என்பது ஒரு கவுரவப் பதவிதான். சட்டமன்றத்தின் அதிகாரத்தை முடக்க முடியாது என்பதை சுப்ரீம்கோர்ட்டின் இத்தீர்ப்பின் வாயிலாக தெளிவுபடுத்தி-மத்திய-மாநில உறவுகளில் அதற்குரிய அதிகாரம், ஒரு தபால்காரருக்குரியதுதான் என்பதைத் தொடர்ந்து தி.மு.க சொல்லி வருகிறது. அது சுப்ரீம்கோர்ட்டால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது" என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "கவர்னருக்குரிய பதவிக்காலம் முடிந்தபிறகும் தமிழ்நாட்டில்தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். எங்களைப் பொறுத்தவரை தமிழுக்கு எதிராகவும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எதிராகவும், தமிழ்நாடு என்ற பெயருக்கு எதிராகவும் செயல்படும் கவர்னர், பச்சையான பா.ஜ.க. காரராகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார். அவருடைய அத்தனை செயல்பாடுகளும் மக்களால் வெறுக்கப்படுவதால், அவர் பதவியில் இருக்கும்வரை பா.ஜ.க.வின் மக்கள் விரோத செயல்பாடுகளை இன்னும் அதிகமாக மேற்கொண்டு, தி.மு.க.வுக்கு மறைமுகமாக உதவி செய்வார்கள்" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கோடம்பாக்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியில் உறையூரில் குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விஞ்ஞான நூற்றாண்டில் கூட நல்ல குடி நீரை கொடுக்க ஸ்டாலின் அரசால் முடியவில்லை என்பது கண்டனத்திற்குரியது.
தமிழ்நாடு கவர்னரை போஸ்ட் மேன் என கூறுகின்றனர். பின் எதிர்கட்சியாக இருக்கும் போது எதற்காக கோரிக்கைகளை கொடுக்க ராஜ்பவன் படிகளை மிதித்தீர்கள்.. அவர்களுக்கு எதிர்கட்சியாக இருக்கும்போது கவர்னர் வேண்டும், ஆளும் கட்சியாக இருக்கும் போது கவர்வர் வேண்டாம். அந்தந்த பதவிக்குரிய மரியாதையை கொடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.