
சென்னை,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், இன்று 20.04.2025 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு சென்னை, எழும்பூரில் உள்ள தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற்றது.
ம.தி.மு.க. நிர்வாக குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய உயரத்தை தமிழ்நாடு அடைந்திருக்கிறது.தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு ஆளுமைத் திறனோடு வழி நடத்தும் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதுடன் 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று நல்லாட்சி தொடர வேண்டுமென்று ம.தி.மு.க. நிர்வாகக்குழு விரும்புகிறது.50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சட்டப் பேரவையில் மாநில சுயாட்சித் தத்துவத்திற்கு செயல் வடிவம் கொடுப்பதற்கு உயர்நிலைக் குழுவை அமைத்திருக்கிற தமிழ்நாடு அரசுக்கு ம.தி.மு.க. நிர்வாகக் குழு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுவதையும், கவர்னர் பொறுப்பை அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தி வருவதையும் சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக உணர்ந்து கொண்டு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.கவர்னர் பதவியில் நீடிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என்.ரவி இழந்து விட்டார். எனவே அவரை ஜனாதிபதி தமிழ்நாடு கவர்னர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று ம.தி.மு.க. நிர்வாகக் குழு கேட்டுக்கொள்கிறது. வக்பு திருத்தச் சட்டம் நாட்டின் பன்முகத் தன்மைக்கும் அரசியல் சட்டத்தின் தனி மனித உரிமைக்கும் சவால் விடுகிறது. இச்சட்டத்தை எதிர்த்து ஜனநாயக வழியில் போராடி முறியடிக்க வேண்டும். வக்பு திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் குறித்து இந்தியப் பிரதமர் இலங்கை அதிபரிடம் கண்டனத்தை பதிவு செய்யாததை இக்கூட்டம் கண்டிக்கிறது.மேற்கண்டவை உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் வருகிற 26-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் மண்டல வாரியாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.