சென்னை,
கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து சென்னை வழியாக பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு செல்லும் வாராந்திர ரெயிலான பாகுமதி எக்ஸ்பிரஸ், கடந்த 12-ந் தேதி இரவு, சென்னை பெரம்பூரை கடந்து திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே சென்றபோது, மெயின் லைனில் இருந்து லூப் லைனுக்கு தடம் மாறி சென்றது. அப்போது அந்த தடத்தில் நின்று கொண்டு இருந்த சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் சிதறிக்கிடந்தன. மேலும் 19 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து காரணமாக அந்த தடத்தில் ரெயில் போக்குவரத்து உடனடியாக ரத்து செய்யப்பட்டது. சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்பு படையினர், உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். சீரமைப்பு பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு அந்த தடத்தில் மீண்டும் ரெயில்கள் இயக்கப்பட்டன. இதற்கிடையே இந்த சம்பவத்தில் நாசவேலை ஏதாவது இருக்கிறதா என்பது குறித்து என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், கவரைப்பேட்டை ரெயில் விபத்து தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதில்,
ட்ராக் மாறும் இடத்தில் உள்ள நட்டு, போல்டுகள் கழட்டப்பட்டதாலேயே விபத்து நிகழ்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இரும்பு திருடும் கும்பல், திருடிய இரும்பைபோடும் கடைகள் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து லோகோ பைலட், ஸ்டேஷன் மாஸ்டர், டெக்னிக்கல் டீம், சிக்னல் டீம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 15 ஊழியர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். விபத்தின் தீவிரத்தை குறைக்கும் வகையில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் வடிவமைக்கப்பட்டு இருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.