சென்னை: திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த அக்டோபர் 11ம் தேதி இரவு நேரத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூரில் இருந்து பீகார் தர்பங்கா நோக்கி சென்ற பாக்மதி விரைவு ரயில் மோதி 13 பெட்டிகள் தடம் புரண்டு தீப்பிடித்து கோர விபத்து ஏற்பட்டது. விபத்தில் 19 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை.
இந்த ரயில் விபத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்து குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தியதில் விபத்து மனித தவறால் நடந்திருக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டது. விபத்து நடந்த இடத்திலிருந்து கிடைத்த செல்போன் சிக்னல்களை வைத்து நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில் பலர் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் பட்டியலில் வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து நடந்த விசாரணையில் அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. இந்த விபத்து குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேரில் வந்து விபத்து நடந்த இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது விபத்து நடந்த இடத்தில் இருந்த ஸ்விட்ச் பாயிண்ட் நட்டு போல்ட்டுகள் கழற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனால் ரயில் விபத்து சதி வேலையாக இருக்க வாய்ப்புள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், கவரப்பேட்டை ரயில் விபத்திற்கு காரணமான குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும், அனைவரிடமும் விசாரணை நிறைவு பெற்று வழக்கு சரியான பாதையில் செல்வதாகவும் குற்றவாளி யார் என்ற தகவலை விரைவில் வெளியிடுவோம் எனவும் ரயில்வே டிஜிபி வன்னியபெருமாள் தெரிவித்துள்ளார்.
The post கவரப்பேட்டை ரயில் விபத்து குற்றவாளிகள் யார் என விரைவில் தெரிவிப்போம்: ரயில்வே டிஜிபி வன்னியபெருமாள் தகவல் appeared first on Dinakaran.