
பர்மிங்காம்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. பணிச்சுமையை கருத்தில் கொண்டு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர் 3-வது டெஸ்டில் ஆடுவார் என கேப்டன் கில் தெரிவித்தார். அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் வாய்ப்பு பெற்றார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 310 ரன்கள் அடித்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ்வோக்ஸ் 2 விக்கெட்டும், ஸ்டோக்ஸ், பிரைடன் கார்ஸ், பஷீர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
முன்னதாக இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது 34-வது ஓவரை பிரைடன் கார்ஸ் வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தை இந்திய வீரர் சுப்மன் கில் எதிர்கொண்டார். அப்போது பிரைடன் கார்ஸ் பந்துவீசும்போது சுப்மன் கில்லின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் அவருடைய இடது கையை இடது பக்கமாக காட்டி வீசினார். இதனை சுதாரித்துக்கொண்ட கில் உடனடியாக விலகினார். நடுவர் அதனை டெட் பால் என்று அறிவித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.