கழுத்தளவு தண்ணீரில் பிரேதத்தை சுமந்து செல்லும் மக்கள் மயானத்திற்கு செல்ல புதிய பாலம் அமைத்து தர வேண்டும்

3 hours ago 1

தேனி : தேனி அருகே சங்க கோணாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இறுதி சடங்கு செய்வதற்கு மூல வைகை ஆற்றில் இறங்கி பிரேதத்தை சுமந்து சென்று மறுக்கரையில் இறுதி சடங்கு செய்யும் பரிதாப நிலை தொடர்ந்து வருகிறது.

தேனி அருகே தேனி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாகலாபுரம் ஊராட்சியில் சங்ககோணாம்பட்டி உட்கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 150 வீடுகள் உள்ளன இக்கிராமத்தில் குடியிருப்போரில் பெரும்பாலானவர்கள் விவசாயம் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்களாகவும், வாகன ஓட்டுனர்களாகவும், கூலி தொழிலாளர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் யாரேனும் உயிரிழக்க நேரிடும் போது அவர்களின் பிரேதத்தை இறுதி சடங்கு செய்வதற்கு என கிராமத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் மூல வைகை ஆற்றின் கரையில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் காத்திருப்போர் அறையுடன் கூடிய மயானம் மற்றும் இறுதி சடங்குகள் மேற்கொள்ள ஆழ்துளை கிணறு வசதி அமைக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் கிராம மக்கள் தங்கள் பகுதியில் மரணிப்பவரை புதைப்பதற்கோ அல்லது எரியுட்டுவதற்கோ இந்த மயானத்தை பயன்படுத்துவதில்லை. பிரேதத்தை கிராம மக்கள் இம்மயானத்தை தாண்டி மூல வைகை ஆற்றை கடந்து மறு கரையில் உள்ள பகுதியில் பிரேதத்தை புதைக்கவும் மற்றும் எரியூட்டமும் செய்து வருகின்றனர்.மூல வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடாத போது பிரதங்களை கொண்டு செல்வதில் சிரமங்கள் இருப்பதில்லை.

அதே சமயம், ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் போது கழுத்தளவு தண்ணீர் செல்லும் நிலையில் இளைஞர்கள் பிரேதத்தை பாடையில் வைத்து தண்ணீருக்குள் இறங்கி கடந்து சென்று இறுதி சடங்கு செய்கின்றனர்.

தண்ணீருக்குள் கழுத்தளவு தண்ணீர் நிரம்பி இருக்கும் பொழுது பிரேதத்தை சுமந்து செல்வோரில் இளைஞர்கள் மட்டுமே மறு கரைக்கு செல்கின்றனர் அதே சமயம் பிரேதத்திற்கு சொந்தமான உறவினர்கள், முதியவர்கள், சிறியவர்கள் மறு கரைக்கு செல்ல முடியாமல் கரையின் முன் பகுதியிலேயே இறுதிச் சடங்கு முடியும் வரை காத்திருந்து திரும்புகின்றனர்.

நேற்று இக்கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மரணம் அடைந்த நிலையில் அவரது பிரேத உடலை உறவினர்கள் கிராமத்தில் இருந்து மயான பகுதிக்கு கொண்டு வந்து அங்கிருந்து பாடையில் சுமந்தபடி கழுத்தளவு ஆழமுள்ள தண்ணீரில் இறங்கி மறு கரைக்குச் சென்று இறுதி சடங்கு செய்தனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ஊராட்சி நிர்வாகம் அமைத்துள்ள மயான பகுதியானது பாறைகள் நிறைந்ததாக உள்ளது பிரேதங்களை அடக்கம் செய்ய 6 அடி ஆழம் தோண்டி புதைக்க வேண்டி உள்ளது.

ஆனால் மயான பகுதியில் பிரேதங்களை புதைக்க மண்ணைத் தோண்டும் போது பாறைகள் வந்து விடுகிறது .இதனால் இப்பகுதியானது மயானத்திற்கு ஏற்றதாக இல்லை எனவே மயானத்துக்கு ஏற்ற பகுதியை கரை ஆற்றுக்கு முன்பாகவே அமைத்துக் கொடுக்காததால் வேறு வழி இன்றி ஆற்று நீரில் இறங்கி மறுகரைக்கு சென்று இறுதி சடங்கு செய்து வருகிறோம். எனவே, மாவட்ட நிர்வாகம் கிராம மக்களின் சிரமங்களை கவனத்தில் கொண்டு மறு கரைக்கு செல்ல பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

பிரேதங்கள் முறையாக மக்குவதில்லை

இதுகுறித்து கிராம ஊராட்சி செயலர் சுருளியிடம் கேட்டபோது, கடந்த 2012ம் ஆண்டு தாய் திட்டத்தின் கீழ் சங்ககோணாம்பட்டியில் இருந்து மூல வைகை ஆறு செல்லும் வழியில் ஆற்றின் கரையோரத்தில் காத்திருப்போர் அறையுடன் கூடிய மயானம் அமைக்கப்பட்டது.

ஆனால் கிராம மக்கள் இம் மயான பகுதி ஏற்கனவே செங்கல் சூளையாக இருந்த இடம் என்பதாலும் இதில் பிரேதங்களை புதைத்தால் பிரேதங்கள் முறையாக மக்குவதில்லை என காரணம் கூறி மயானத்தில் இறுதி சடங்குகள் செய்வதை தவிர்த்து ஆற்றின் மறு கரையோரத்தில் உள்ள பகுதியில் இறுதி சடங்குகளை செய்து வருகின்றனர்.

தற்போது கிராம ஊராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மயானம் தவிர இதன் அருகே புதைகுழிக்கு ஏற்ற இடம் ஒதுக்க புறம்போக்கு இடம் இல்லாததால் வேறு இடம் ஒதுக்க முடியாத சூழல் உள்ளது’’என்றார்.

The post கழுத்தளவு தண்ணீரில் பிரேதத்தை சுமந்து செல்லும் மக்கள் மயானத்திற்கு செல்ல புதிய பாலம் அமைத்து தர வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article