கழிவுநீர் கால்வாய் இல்லாததால் சிட்கோ வளாக சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீர்

3 hours ago 2

*தொற்று நோய் பரவும் அபாயம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி சிட்கோ வளாகத்தில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால், சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில், 5 ரோடு ரவுண்டானாவில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில், சிட்கோ வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் 30க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் உள்ளன.

அத்துடன், சிட்கோ அலுவலகம், மாவட்ட தொழில் மைய அலுவலகம், இருசக்கர வாகன விற்பனை நிலையங்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நிலையம், வங்கி, ஐடி நிறுவனங்கள், ஓட்டல்கள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், அட்டை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை, இனிப்பு பலகாரங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், ஆயில் விற்பனை நிலையம் என பல்வேறு நிறுவனங்கள் உள்ளது. இந்த வளாகம் தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் பகுதியாகவும் உள்ளது.

இந்த வளாகத்தில் உள்ள பூங்காவில் காலை மற்றும் மாலை வேளைகளில் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். நகரத்திற்கு பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்களும், இளைப்பாற இந்த பூங்காவிற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

பூங்காவினை நகராட்சி நிர்வாகம் நிர்வாகித்து வருகிறது. பூங்காவிற்கு வரும் பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். சிட்கோ வளாகத்தில் உள்ள சிறு, குறுந்தொழிற்சாலைகளில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தினமும் வந்து செல்கின்றனர்.

இந்த வளாகத்தில் சாலையின் இருபுறமும், பல ஆண்டுகளுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டிருந்தது. தற்போது, அந்த கால்வாய்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் மழை காலங்களில் மட்டுமின்றி, தினமும் தொழிற்சாலைகளில், ஓட்டல்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக மழை காலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து வெளியேறுவதால், இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசும் பகுதியாக மாறியுள்ளது.

கழிவுநீர் செல்வதால், ஆங்காங்கே முட்புதர்களும் மண்டி உள்ளது. இதனால் பட்டப்பகலில் பாம்புகள் நடமாடும் பகுதியாக மாறியுள்ளது. இதனால், பகலில் கூட பொதுமக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த சிட்கோ அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் உள்ள கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி, கழிவுநீர் சாலையில் வெளியேறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, இப்பகுதிக்கு வந்து செல்லும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

இது குறித்து இப்பகுதியில் தொழிற்சாலை நடத்தி வருபவர்கள் கூறுகையில், ‘ஏற்கனவே இருந்த கழிவுநீர் கால்வாய் அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளதால், கழிவுநீர் வெளியேறுவதற்கான போதிய வசதி இல்லாமல் உள்ளது. இதனால் மழை காலங்களில் மழை நீருடன்இ கழிவுநீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, ஏற்கனவே உள்ள கழிவுநீர் கால்வாயை தூர்வாருவதுடன், சிட்கோ தொழிற்பேட்டை முழுவதும் புதியதாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

The post கழிவுநீர் கால்வாய் இல்லாததால் சிட்கோ வளாக சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீர் appeared first on Dinakaran.

Read Entire Article