கழட்டிவிட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக கொடுக்கப்பட்ட பாதுகாப்பை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

3 hours ago 1

‘‘சேலத்துக்காரரின் ஆர்ப்பாட்ட அறிவிப்புக்காக அரைகுறை மனதுடன் வந்த இலைக்கட்சிக்காரங்க காக்கிகளை கண்டு தலைதெறிக்க நாலாபுறமும் சிதறி ஓடினாங்களாமே..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூரில் அரசு மருத்துவமனையை மூடிவிட்டதாக கூறி, இலை பார்ட்டிகள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போறாங்கன்னு சேலத்துக்காரர் அறிவிச்சாரு.. இந்த ஆர்ப்பாட்ட அறிவிப்புல இலை பார்ட்டிகளோட அடிமட்ட தொண்டர்களுக்கு உடன்பாடு இல்லைன்னு பரவலா பேச்சு அடிபட்டது.. இருந்தாலும் என்ன செய்றது, அறிவிச்சபடி, வெயிலூர் சிட்டியில தடையை மீறி, ஆர்ப்பாட்டம் நடந்துச்சு..

பொறுப்பாளர் மாஜி மந்திரியான முருகக்கடவுள் பெயர் கொண்டவர் தலைமையில் இலை பார்ட்டிகள் வந்திருந்தாங்க.. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடந்துறதால கைது செய்ய காக்கிகள் நெருங்கினாங்க.. இதனால இலை பார்ட்டிகள் நாலாபுறமும் சிதறி ஓட்டம் பிடிக்க ஆரம்பிச்சுட்டாங்களாம்.. உஷாரான காக்கிகள் கொத்தாக பிடிச்சு வேனில் ஏற்றிவிட்டாங்க.. இதுல சிலபேரு, சார் நான் ஆர்ப்பாட்டத்துக்கு வரவே இல்லை. சும்மா டீ குடிக்க வந்தேன்னு சொல்லி.. விட்டா போதும் என்ற நிலைக்கு இலை பார்ட்டிகள் நிலை ஆகிடுச்சாம்..

இதை பார்த்த மற்ற இலை தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடக்கும் ஏரியாவுக்கே வராமல் தூரத்தில் இருந்து தப்பிச்சுட்டாங்களாம்.. கைதுக்கு பயந்து தலைதெறிக்க ஓடிய இலை பார்ட்டிகளோட ஆர்ப்பாட்டத்தை பற்றித்தான் வெயிலூர்ல பரபரப்பாக பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கடைசி நேரத்தில் கைவிட்டுவிடக் கூடாதுன்னு ரொம்ப அலர்ட்டா இருப்பதை காட்டிக்கொள்ளதான் டெல்லி இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுத்ததுக்கு காரணமாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி தலைவரின் ஆசையை நிறைவேற்றுவதில் டெல்லி ரொம்பவே ஆசை ஆசையா இருக்காங்களாம்..

கடைசி நேரத்தில் கைவிட்டு விடக்கூடாது என்பதிலும் ரொம்பவே அலர்ட்டாவும் இருக்காங்களாம்.. இதற்கு எடுத்துக்காட்டாகத்தான் இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுத்து அசத்தியிருக்காங்களாம்.. இதனால் மனம் நெகிழ்ந்துபோனாராம் இலைக்கட்சி தலைவர். இந்த சூட்டோடு சுற்றுப்பயணத்தையும் தொடங்கிட்டாராம்.. இவ்வாறு பயணத்தை தொடங்கும்போது நம்மை சுற்றி கோஷம் எழுப்ப தொண்டர்கள் வருவார்களா என்று சன், மைத்துனருடன் இலைக்கட்சி தலைவர் ஆலோசனை செஞ்சாராம்.. இதன்படி மாங்கனி மாவட்டத்துல இருந்து மட்டும் 250 பேரை களம் இறக்க முடிவு பண்ணி இறக்கியிருக்காங்க..

இவர்கள் அனைவரும் மாங்கனி மாவட்டத்தை சேர்ந்த ரத்தத்தின் ரத்தங்கள் என்றாலும் கொங்குகாரர்களாம்.. மற்றவர்கள் என்றால் வெளியே சொல்லிவிடுவார்கள் என்பதால் இந்த ஏற்பாட்டை செஞ்சதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. மாங்கனி மாநகரில் இருந்து இலைக்கட்சி தலைவர் புறப்பட்டபோது, 25 கார்களில் அவர்களை அழைச்சிட்டு போனாங்களாம்.. இந்த பயணத்தின்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என அவர்களுக்கு தனி வகுப்பு நடத்தினாங்களாம்..

இலைக்கட்சி தலைவர் பயணத்தை தொடங்கும் நேரத்தில் நாலு நாலு பேராக ஆங்காங்கே நின்று கொள்ள வேண்டும். இசட்பிளஸ் பாதுகாப்புடன் வண்டி புறப்படும் நேரத்தில் வாழ்க கோஷம் எழுப்ப வேண்டும் எனவும் சொல்லி இருக்காங்களாம்.. அதோடு அவர்களுக்கு கருப்பு வெள்ளையில் புத்தாடையும் தைத்து கொடுத்திருக்காங்களாம்.. அவர்களின் திட்டமிட்ட பிளான்படியே பயணம் போய்கிட்டிருப்பதாக கட்சிக்காரங்க சொல்லி மகிழ்கிறாங்க..

ஆனால் இந்த பொறுப்பை அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் கொடுக்கும் பட்சத்தில் பிளானை அவர்கள் சொதப்பி விட்டால் என்ன செய்வது என்பதற்காக தனக்கு தானே செய்து கொள்ளும் ஏற்பாடுகள் என கட்சிக்காரங்க சொல்றாங்க.. அதே நேரத்தில் மாங்கனி மாவட்டத்தில் இருந்தும் பயணத்தில் கலந்துக்கிடவும் ரத்தத்தின் ரத்தங்களுக்கு உத்தரவு போட்டிருக்காங்களாம்.. இதனால இலைக்கட்சி தலைவர் ரொம்பவே உற்சாகமாக இருக்காராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘புதுச்சேரியில் முகாமிட்டு இருக்கும் சிபிஐ அதிகாரிங்க ஆதாரங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்களாமே..’’ எனக் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘அசால்ட்டாக அரசியல் கூத்துக்கள் அரங்கேறும் யூனியனான புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல பணிகள் நடந்துக்கிட்டு வருதாம்.. இதில் சில முறைகேடுகள் நடந்திருக்கதா சொல்கிறாங்க.. இதனால் சிபிஐயின் கண்காணிப்பு புதுச்சேரி, காரைக்காலை அவ்வப்போது வட்டமடித்தபடி உள்ளதாம்..

ஏற்கனவே கோயில் நில மோசடியில் சில அதிகாரிகள் சிக்கியிருந்த நிலையில், காரைக்காலில் பொதுப்பணி உயர் அதிகாரிகளை கையும் களவுமாக பிடித்த 3 பேரை சிறையில் அடைத்ததாம் சிபிஐ.. பத்திரப்பதிவு துறையிலும் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியான நிலையில் சார் பதிவாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு காக்கிகளால் தேடப்பட்டு வருகிறாராம். நிலைமை இப்படியிருக்க மீண்டும் மீண்டும் ஆதாரங்களுடன் சிபிஐக்கு புகார்கள் பறக்க ஒரு வாரமாக சிபிஐ அதிகாரிகள், புதுச்சேரியில் முகாமிட்டு ஆதாரங்களை திரட்டும் பணிகளில் உலாவுகிறார்களாம்..

குறிப்பாக சில மாண்புமிகு ரகசியமாக கவனிக்கப்படுவதால் அரசு வட்டாரமே கதிகலக்கத்தில் உள்ளதாம்.. புல்லட்சாமியின் கூட்டணி முடிவே அடுத்தகட்ட நகர்வுகளை முன்னெடுக்கும் என்பது பற்றிதான் புதுச்சேரி முழுக்க பரவலாக பேச்சு..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தலைவர் மாற்றத்தால் யாரும் யாருக்கும் ஒத்துழைப்பு கொடுக்காததால் நதி மாவட்டத்தில் மலராத கட்சியின் நிலை பரிதாபகரமான நிலைக்கு போயிட்டு இருக்கிறதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘லிங்கசாமியின் ெபயர் கொண்ட நதி மாவட்டத்தில் மலராத கட்சியின் மாவட்ட தலைவர் மாற்றத்திற்கு பிறகு கட்சி இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு முடங்கியுள்ளதாக அக்கட்சியினரே சொல்லிட்டு வர்றாங்க.. மாவட்ட தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மாற்றத்திற்கு பிறகு கட்சிக்குள் ஏகப்பட்ட குழப்பமாம்.. தான் கை காட்டியவரே மாவட்ட தலைவர் ஆனதால், மாஜி போலீஸ்காரர் கெத்தாக இருந்தார். தனது ஆதரவை பெருக்குவதிலேயே குறியாக இருந்தார். குறிப்பாக, மாஜி தேசிய செயலாளருக்கு எதிராக தனது பவரை காட்ட வேண்டுமென்ற நோக்கத்தில் வேலை பார்த்து வந்தார்.

மாஜி தேசிய செயலாளருக்கு ஆதரவாளர்களாக மாவட்டத்தில் பல சீனியர்கள் இருந்தும், கட்சியினரோடு அதிக நெருக்கமில்லாத துரையானவரையே, மாவட்ட பதவிக்கு கொண்டு வந்தார் மாஜி போலீஸ்காரர். இதனால் புதிய நிர்வாகிகள் ஒரு அணியாகவும், மூத்த நிர்வாகிகள் ஒரு அணியாகவும் பிரிந்து செயல்படுறாங்க.. யாரும், யாருக்கும் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்பதால், மாவட்டத்தில் மலராத கட்சியே இல்லை என்ற நிலை உருவாகி விடுமோ என கட்சியினர் அச்சத்தில் இருக்காங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post கழட்டிவிட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக கொடுக்கப்பட்ட பாதுகாப்பை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article