மதுரை: கள்ளந்திரி கிராமத்தில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் மீன்களை அள்ளிச் சென்றனர். மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட கள்ளந்திரி அம்மச்சியாபுரம், தொப்புலான்பட்டி உள்ளிட்ட 5 கிராம மக்களுக்கு பாத்தியப்பட்ட ஐந்து கோயில் முத்தன் கண்மாய் கள்ளந்திரியில் உள்ளது. சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கண்மாயில் ஐந்து கோயிலில் வேண்டுதல் நிறைவேறியவர்கள், மீன் குஞ்சுகளை காணிக்கையாக விடுவர். மேலும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி, மீண்டும் அழகர் கோயிலுக்கு வந்தடைந்த பிறகு அதை கொண்டாடும் வகையிலும் இந்த மீன் பிடித்திருவிழா நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இதற்காக அலங்காநல்லூர், பாலமேடு, மேலூர் கொட்டாம்பட்டி என மதுரை மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு மீன்களை ஆர்வமாக பிடித்துச் சென்றனர். அதிகாலை முதலே கண்மாயில் காத்திருந்த நிலையில் கிராம பெரியவர்கள் வெள்ளை வீசி அனுமதி அளித்தவுடன் கண்மாயினுள் இறங்கி மீன்களை பிடிக்க துவங்கினர். இதில் கட்லா, கெளுத்தி, அயிரை, ரோகு, பாப்லட் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை பிடித்த பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
மீன்பிடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டதையொட்டி அப்பகுதியில் அப்பன்திருப்பதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
The post கள்ளழகர் கோயில் திரும்பியதை கொண்டாடும் விதமாக கள்ளந்திரி கண்மாயில் மீன்பிடி திருவிழா appeared first on Dinakaran.