சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் 19-ம் தேதியன்று விஷச் சாராயம் குடித்து 69 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை, வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் தலைவரும், பாமக செய்தி தொடர்பாளருமான வழக்கறிஞர் கேபாலு, பாஜக வழக்கறிஞர் ஏற்காடு ஏ.மோகன்தாஸ், தேமுதிக முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி, அதிமுக முன்னாள் எம்எல்ஏ வால்பாறை டாக்டர் ஸ்ரீதரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.