கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் தற்கொலை; காரை மோதி பெட்ரோல் பங்க் மேலாளர் வெட்டிக்கொலை: போலீசார் மீது அரிவாளை வீசி தப்ப முயன்ற 2 பேர் கைது

1 day ago 2

கயத்தாறு: கயத்தாறு அருகே பெட்ரோல் பங்க் மேலாளரை காரால் மோதி, அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு விபத்து போல் சித்தரிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள காப்புலிங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா மகன் சங்கிலிபாண்டி (29). இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சங்கிலிபாண்டி கடம்பூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் தனது பைக்கில் பெட்ரோல் பங்க் பணிக்கு செல்வது வழக்கம். நேற்று காலை தனது ஊரில் இருந்து பைக்கில் புறப்பட்ட சங்கலிபாண்டி கடம்பூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். சத்திரப்பட்டி விலக்கு அருகே சென்ற போது எதிரில் வந்த கார், சங்கிலிபாண்டி ஓட்டி வந்த பைக் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த சங்கிலிப்பாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த 2 பேர் காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் பற்றி தகவலறிந்த கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் சுகாதேவி மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று ஆய்வு செய்தனர். அப்போது இறந்து கிடந்த சங்கிலிப்பாண்டியின் உடலில் வெட்டுக் காயங்கள் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து இது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என தெரியவந்தது.

விபத்தை ஏற்படுத்திய ஆளில்லாத காரின் உரிமையாளரை பற்றி போலீசார் விசாரித்த போது அந்த கார் காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்த சண்முகராஜன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. குற்றவாளிகள் வெளியே சென்றிருக்க வாய்ப்பில்லை என்பதால் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தொடங்கினர். அப்போது காட்டுப்பகுதியின் மையப்பகுதியில் மறைந்து இருந்த இரண்டு பேரை போலீசார் பிடிக்க முற்பட்டனர். அப்போது இருவரும் தாங்கள் வைத்திருந்த அரிவாள்களை போலீசார் மீது வீசிவிட்டு தப்பித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார், அவர்களை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து பிடித்தர்.

அவர்களை போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் காப்புலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சண்முகராஜ் மற்றும் மகாராஜன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்து கயத்தாறு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அதில், கைது செய்யப்பட்ட சண்முகராஜ் மனைவி சங்கீதா கடந்த ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொலை செய்யப்பட்ட சங்கிலிபாண்டிக்கும், சண்முகராஜ் மனைவிக்கும் பழக்கம் இருந்ததாகவும், இது வெளியே தெரியவந்ததால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. தன்னுடைய மனைவி தற்கொலை செய்து கொண்டதற்கு சங்கிலிபாண்டி தான் காரணம் என நினைத்த சண்முகராஜ் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று சங்கிலிபாண்டி தனது நண்பர் மகாராஜன் உடன் இணைந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் விபத்தில் படுகாயத்துடன் சங்கிலிபாண்டி தப்பித்து விட்டார். இதனால் தங்களை எங்கே காட்டிக் கொடுத்து விடுவாரோ என்ற பயத்தில், தயாராக வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பித்து ஓடி விட்டனர். மேலும் விபத்து என போலீசாரை நம்ப வைப்பதற்காக அவர்களது காரையும் அதில் நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்தனர்.

ஆனால் உடலில் வெட்டுக் காயங்கள் இருந்ததால் துப்பு துலக்கிய போலீசார் உடனடியாக கொலையாளிகளை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

The post கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் தற்கொலை; காரை மோதி பெட்ரோல் பங்க் மேலாளர் வெட்டிக்கொலை: போலீசார் மீது அரிவாளை வீசி தப்ப முயன்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article