கள்ளக்காதலியை அரசு அதிகாரி என கூறி போலீஸ் ஏட்டு மெகா மோசடி 30 தொழிலதிபர்களை ஏமாற்றி ரூ.15 கோடிக்கு மேல் சொத்து குவிப்பு: பரபரப்பு தகவல்கள்

3 months ago 16

நெல்லை: கள்ளக்காதலியை அரசு அதிகாரி என கூறி 30 தொழிலதிபர்களை ஏமாற்றி போலீஸ் ஏட்டு ரூ.15 கோடிக்கு மேல் சொத்து வாங்கி குவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம், வீ.கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகராஜ் (41). இவர், நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் ஏட்டுவாக பணிபுரிந்து வருகிறார். இவர் ஓசூரைச் சேர்ந்த வளர்மதியை மதுரை டிஆர்ஓ எனக்கூறி மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சசிகுமார் (40) என்பவருக்கு அறிமுகப்படுத்தி பட்டா வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் பெற்று மோசடி செய்து உள்ளார்.

இதுகுறித்து சசிகுமார் அளித்த புகாரின்பேரில், நெல்லை சந்திப்பு போலீசார் வழக்கு பதிந்து ஏட்டு முருகராஜ் மற்றும் வளர்மதியை கைது செய்து விசாரித்தனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: முருகராஜின் சொந்த ஊரான வீ.கே.புதூர் அருகே கலங்கல் கிராமத்தை சேர்ந்தவர் வளர்மதி. சில ஆண்டுகளுக்கு முன்பு, வளர்மதி தனது தந்தையுடன் ஓசூருக்கு இடம் பெயர்ந்தார்.

அதன் பின்னர், அவ்வப்போது சொந்த ஊருக்கு செல்லும்போது முருகராஜூடன் அவர் பழக ஆரம்பித்து கள்ளக்காதலாக மாறியது. சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்ட இருவரும் மோசடியில் ஈடுபடத்துவங்கினர். வளர்மதி, தன்னை டிஆர்ஓ மற்றும் டாக்டர் என கூறியும், முருகராஜ் தன்னை இன்ஸ்பெக்டர் எனக்கூறியும் 30க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக மோசடியில் சிக்கினால் புகார் கொடுக்க தயங்கும் சில தொழில் அதிபர்களை குறிவைத்து முருகராஜ், தனது மனைவி டிஆர்ஓ என்றும் தான் பிரச்னை இல்லாமல் வேலையை முடித்து விடுவதாகவும் கூறி அணுகி உள்ளார். அதன் பின்னர் வளர்மதி அந்த நபர்களிடம் டிஆர்ஓ தோரணையில் பேசி ஒவ்வொருவரிடமும் பல லட்சங்களை மோசடி செய்து உள்ளனர். வளர்மதி தனது பெயரில் 5க்கும் மேற்பட்ட வங்கிகளில் புதிதாக கணக்கு தொடங்கி உள்ளார்.

அதில் சில வங்கி கணக்குகளில் முருகராஜ் பெயரை தனது கணவர் என்று அதிகாரப்பூர்வமாக குறிப்பிட்டுள்ளார். அதிகாரப்பூர்வமாக கிடைத்த 2 வங்கி கணக்குகளில் மட்டுமே கோடிக்கணக்கில் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இவர்களது வங்கி கணக்கில் சுமார் ரூ.15 கோடிக்கு பணப்பரிவர்த்தனை நடந்து உள்ளது.

இன்னும் சில வங்கி கணக்குகளும் இருப்பதால் மோசடி தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என போலீசார் தெரிவித்தனர். கைதான முருகராஜ், வளர்மதி ஆகியோரின் அடையாள அட்டைகளை வைத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு செய்ய உள்ளோம். அதன்பின்னரே எவ்வளவு சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளனர் என்ற விபரம் தெரியவரும். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

* கண்ணாடி மாளிகை, தோட்டம் வாங்கி குவிப்பு
வளர்மதியை நெல்லை சந்திப்பு போலீசார் கைது செய்த பின்னர் அவரது வீட்டில் சென்று சோதனையிட்டு அங்கு ஏராளமான சொத்து ஆவணங்களை கைப்பற்றினர். அந்த ஆவணங்கள் அனைத்தும் வளர்மதியிடம் இருந்து முருகராஜிக்கு மாற்றி எழுதிக் கொடுக்கப்பட்ட சொத்து ஆவணங்கள் ஆகும். அந்த ஆவணங்களில் ஓசூரில் 9 சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது.

அதில், அங்குள்ள 30 ஏக்கர் தோட்டம், கண்ணாடி மாளிகை, ஏற்காட்டில் உள்ள தோட்டம் உள்ளிட்டவைகளை வளர்மதி முருகராஜ் பெயரில் எழுதி கொடுத்ததாக ஆவணங்கள் கிடைத்துள்ளன. எனினும் அந்த ஆவணங்களின் உண்மை தன்மை குறித்து முழுமையாக ஆராய்ந்த பின்னரே சொத்து விபரங்கள் தெரியவரும்.

* ஏட்டு சஸ்பெண்ட்
கைதான ஏட்டு முருகராஜ், வளர்மதியுடன் சேர்ந்து பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது உறுதியானதை தொடர்ந்து அவரை சஸ்பெண்ட் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா நேற்று உத்தரவிட்டு உள்ளார்.

The post கள்ளக்காதலியை அரசு அதிகாரி என கூறி போலீஸ் ஏட்டு மெகா மோசடி 30 தொழிலதிபர்களை ஏமாற்றி ரூ.15 கோடிக்கு மேல் சொத்து குவிப்பு: பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Read Entire Article