திருச்சி: திருச்சி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பிப்.2ம் தேதி இரவு 9.51 மணியளவில் பேசிய மர்ம நபர், ஸ்ரீரங்கம் கோயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் எனக்கூறி விட்டு இணைப்பை துண்டித்தார். இதுபற்றி ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தற்போது தைத்தேர் உற்சவம் நடந்து வருவதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
இதை கருத்தில் கொண்டு ஸ்ரீரங்கம் கோயிலின் அனைத்து பகுதிகளிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண் சிக்னலை ஆய்வு செய்ததில் ஸ்ரீரங்கம் பகுதியில் இருந்து அழைப்பு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே சுற்றித்திறிந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
இதில், அவர் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி திம்மம்பேட்டையை சேர்ந்த செந்தில்குமார் (32) என்பதும், ஸ்ரீரங்கம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘கைதான செந்தில்குமாருக்கும், ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த செந்தில்குமார் தனது செல்போனில் இருந்து கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்’’என்றனர். இதையடுத்து அவரை கைது செய்தனர்.
The post கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட தகராறில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஆட்டோ டிரைவர் கைது appeared first on Dinakaran.