
ரோத்தக்,
அரியானாவின் ரோத்தக் நகரில் பாகு அக்பர்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தோப் பகுதியை சேர்ந்தவர் மகன் என்ற அஜய். ஹிசார் பகுதியை சேர்ந்தவர் திவ்யா. 2020-ம் ஆண்டு பேஸ்புக் வழியே இருவரும் தொடர்பு கொண்டனர். அது பின்னர் காதலானது.
திவ்யாவை காதலித்து வந்த அஜய் டெல்லியில் ஆரிய சமாஜத்தில் வைத்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், திவ்யாவுக்கு தீபக் என்பவருடன் உறவு ஏற்பட்டு உள்ளது. அவர் காவல் ஆய்வாளராக உள்ளார். இதனை அஜய் பெரிய அளவில் எடுத்து கொள்ளவில்லை. ஆனால், திவ்யாவின் நடவடிக்கைகள் சிலவற்றை அறிந்த அஜய் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
தீபக்குடன் ஒன்றாக சுற்றுவது, நள்ளிரவில் ஆபாச நடனம் ஆடுவது, வீடியோ எடுப்பது என திவ்யா இருந்திருக்கிறார். இந்நிலையில், அஜய் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அஜயின் செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
அதில், ஓட்டல் ஒன்றில் அரைகுறை ஆடையுடன் கள்ளக்காதலர் தீபக் உடன் திவ்யா நடனம் ஆடிய வீடியோ இருந்துள்ளது. குடும்ப பெண்ணான திவ்யா இதுபோன்ற ஆடைகளை ஒருபோதும் அணிந்ததில்லை. செல்போனில் ஆபாச வீடியோவும் உள்ளது என கூறப்படுகிறது.
சமீபத்திலேயே இந்த வீடியோ அஜய்க்கு அனுப்பப்பட்டு உள்ளது என குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனால், மனஉளைச்சலில் அஜய் இருந்துள்ளார். இந்த சூழலிலேயே தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார். இதுதவிர, முதல் திருமணம் நடந்தது பற்றி அஜய்க்கு தெரியாமல் மறைத்து அவரை திருமணம் செய்திருக்கிறார்.
அதன்பின்பே, திவ்யாவின் கணவருக்கு பணம் கொடுத்து விவாகரத்து பெற்றிருக்கிறார். திவ்யாவுக்கு திருமணத்திற்கு முன்பே ஒரு மகனும் உள்ளார். திவ்யாவுக்கு அஜய் 3-வது காதலன் ஆவார்.
அஜய், ரூ.20 கோடி மதிப்பிலான நிலத்திற்கு சொந்தக்காரராக இருந்தபோதும், மனைவியின் தேவையை பூர்த்தி செய்வதற்காக பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு உள்ளார். பண்ணையில் வேலை செய்து, ரூ.1.5 லட்சம் பணம் ஈட்டி, மனைவியிடம் கொடுத்துள்ளார். தங்க நகைகளை விற்றும் மனைவி வங்கி கணக்கில் பணம் போட்டுள்ளார்.
திவ்யா, ஐபோன் வேண்டும் என கேட்டதற்காக, உணவு டெலிவரி செய்யும் வேலையிலும் சேர்ந்துள்ளார். அதில் கிடைத்த ரூ.1.5 லட்சம் தொகையை கொண்டு ஐபோன் வாங்கி தந்துள்ளார். மனைவி கேட்ட எல்லாவற்றையும் சொந்த உழைப்பில் வாங்கி கொடுத்துள்ளார்.
ஆனால், திவ்யாவுக்கோ அஜயின் சொத்து மீது மட்டுமே கவனம் இருந்துள்ளது. அவருடைய ரூ.17 கோடி நிலம் பற்றி செயலி ஒன்றின் வழியே திவ்யா தெரிந்து வைத்திருக்கிறார். அஜயிடம் நிறைய சொத்துகள் உள்ளன என தெரிந்ததும், அதனை அபகரிக்க திட்டமிட்டு உள்ளார்.
அஜயின் தந்தை ரன்வீரை கொலை செய்து விட்டு, கோடிக்கணக்கான மதிப்பிலான நிலங்களை விற்று அந்த தொகையை தனக்கு தரும்படி, அஜயை திவ்யா வற்புறுத்தி இருக்கிறார். ஆனால், தந்தையை கொல்வதற்கு பதிலாக, அஜய் தூக்கு போட்டு தற்கொலை செய்து உள்ளார். அதற்கு முன் 2 வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், போலீசாரிடம் இந்த கொடுமைக்கு பின்னணியில் உள்ள திவ்யா மற்றும் தீபக் ஆகிய இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கும்படி கண்ணீர் விட்டபடி கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து, திவ்யா மற்றும் தீபக்கை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
இதில், முதல் கணவரை விவாகரத்து செய்யாமலேயே, அஜயை 2-வது திருமணம் செய்திருக்கிறார். கள்ளக்காதலனுடன் லிவ்-இன் உறவில் இருந்து வந்திருக்கிறார். மும்பையில் செட்டில் ஆக முடிவு செய்திருக்கிறார். தீபக்கிற்கு பணி உயர்வு பெறுவதற்காக மொத்தம் ரூ.5 லட்சம் தேவைப்பட்டு இருக்கிறது.
கணவரிடம் தொடர்ந்து, பணம் கேட்டு வந்திருக்கிறார். அஜய் இதுவரை ரூ.3.5 லட்சம் கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.1.5 லட்சம் பணம் தரும்படி திவ்யா வற்புறுத்தி வந்திருக்கிறார்.
அதனை அஜயிடம் இருந்து அபகரிக்கும் நோக்கில் இருந்த திவ்யா, ஒரு கட்டத்தில், தீபக்குடன் நள்ளிரவில் அரைகுறையான ஆடையுடன் ஓட்டலில் ஆபாச நடனம் ஆடிய வீடியோவை செல்போனில் அஜய்க்கு அனுப்பி இருக்கிறார். இதனை பரப்பி விடுவேன் என மிரட்டி கணவரிடம் பணம் கேட்டு இருக்கிறார். இதனால் விரக்தி அடைந்து அஜய் தற்கொலை செய்து இருக்கிறார் என்றும் தகவல் தெரிவிக்கிறது.
கள்ளக்காதலனின் பணி உயர்வுக்கு தேவையான பணத்திற்காக ஆபாச வீடியோவை எடுத்து, அதனை கணவருக்கு அனுப்பி, கணவரிடமே பணம் கேட்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.