‘‘முறையாக வாடகை செலுத்தி வரும் கடைக்காரர்களும் முறைகேடு செய்யும் வகையில் அதிகாரிகள், ஊழியர்கள் பல்வேறு வகையில் வசூல் பார்த்து வர்றாங்களாமே எங்க..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘கடைகோடி மாநகராட்சியில், வருவாய் பிரிவு, சுகாதாரப்பிரிவு, பொறியியல் பிரிவில் சில அதிகாரிகள், ஊழியர்கள் பல்வேறு வகையிலும் டப்பு பார்த்து வருகின்றனராம்.. குறிப்பாக செயல்படாத போர்வெல்களின் மின்இணைப்பு மூலம், அப்பகுதி விழாக்களுக்கு மின்சாரம் எடுக்க மாநகராட்சி ஊழியர்கள் சிலர் உடந்தையாக உள்ளனராம்.. இதனால் மட்டும் ஆண்டிற்கு ரூ.2 கோடி மாநகராட்சிக்கு இழப்பாம்.. நிர்வாக ரீதியான விசயங்களை ஆணையரை சுற்றி இருக்கும் உதவியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்டு செல்ல விடுவதில்லையாம்.. ஊழியர்கள் சிலரே சந்தையில், கால்வாய் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளுக்கு சொற்ப வாடகை நிர்ணயம் செய்து பினாமி பெயரில் கூடுதல் வாடகைக்கு விட்டுள்ளனராம்.. சமீபத்தில் சந்தையில் தலா ரூ.2.75 லட்சம் பாக்கி வைத்துள்ள 7 கடைகளுக்கு மாநகராட்சி சீல் வைத்ததாம்.. ஆனால், இந்த கடைகளின் சீலை, அந்த கடைக்காரர்கள் உடைத்து அத்துமீறி திறந்துட்டாங்களாம்.. இன்னமும் வாடகை பாக்கியும் செலுத்தவில்லையாம்.. இதுபற்றி மேயர் கவனத்திற்கு சென்றதும் பாரபட்சமின்றி அவர்கள் மேல் காவல்துறையில் புகார் செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளாராம்.. ஆனால், மாநகராட்சி அதிகாரிகளோ, மேயர் உத்தரவின்படி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது மொத்த வாடகை பாக்கியில் சிறு தொகையை மட்டும் கட்டுங்கள், பிரச்னை வராமல் பார்த்துக்கொள்கிறோம் என கூறியதாக சக கடைக்காரர்கள் பேசிக்கிறாங்களாம்.. இதனால், முறையாக வாடகை செலுத்தி வரும் கடைக்காரர்களும், இதே வழியை பின்பற்றலாமா என ஆலோசித்து வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பெயரளவில் மட்டுமே சபைக்கு வந்த அம்மணி ஒருவர் தேர்தல் நெருங்குவதால் ஓங்கி ஓங்கி குரல் கொடுத்து சலசலப்பு ஏற்படுத்தி விட்டாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘யூனியன் பிரதேசமான புதுச்சேரி சபையில் ஒரே ஒரு பெண் உறுப்பினர் மட்டுமே இருக்கிறார். தனிப்பட்ட விவகாரத்தால் அமைச்சர் பதவியை இழந்த அம்மணி, கடந்தாண்டு சபை கூட்டத்தில் பெயரளவில் மட்டுமே பங்கேற்றாராம்.. ஆனால் அடுத்தாண்டு தேர்தல் வரவுள்ளதால் தற்போதைய கூட்டத்தில் தவறாமல் அம்மணி கலந்துகொண்டுள்கிறாராம்..
முதலில் எதிர்க்கட்சிக்கு எதிராக இருக்கை மீது ஏறி நின்று தடாலடி காட்டிய அம்மணி அடுத்ததாக தனது ஆளுங்கட்சிக்கு எதிராக மறைமுக தாக்குதல்களை சபையில் தொடுத்தாராம்.. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை… டீ- காபி வாங்கதான் மகளிர் போலீசை பயன்படுத்துகிறீங்க… என்று கொந்தளித்து விட்டாராம்.. தனது பிராந்தியமான காரைக்காலுக்கு மட்டுமின்றி புதுச்சேரிக்கும் சேர்த்து அம்மணி சபையில் ஓங்கி ஓங்கி குரல் கொடுத்தாராம்.. இதன் பின்னணி என்ன என்றுதான் சபையிலும், புல்லட்சாமி கட்சி வட்டாரத்திலும் அரசல் புரசலாக பேச்சுகள் ஓடுகிறது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சி தலைமையானவர் மீது டெல்டாவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் எல்லாம் கடும் அதிருப்தியில் இருக்காங்களாமே எதுக்காம்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைமையானவரான சேலத்துக்காரர் மலராத கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகியை நேரில் சந்திக்க தலைநகருக்கு சென்று இருந்தார். அப்போது அவருடன் சீனியர் நிர்வாகிகளான மாஜி அமைச்சர்கள் 4 பேர் மட்டுமே உடன் சென்று இருந்தாங்க.. ஆனால் டெல்டாவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் தலைநகருக்கு செல்ல அழைப்பு விடுக்கவில்லையாம்.. இதனால் சேலத்துக்காரர் மீது நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருக்காங்களாம்.. மலராத கட்சியில் உள்ள முக்கிய தலைவர்களை சந்திக்கும் போது டெல்டாவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை சேலத்துக்காரர் கண்டுகொள்ளாமல் இருப்பதால் தொண்டர்கள் வரை பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாம்.. தலைமைக்கு தாங்கள் யார் என்பதை புரிய வைக்க நிர்வாகிகள் எல்லாரும் முடிவு செய்திருக்காங்களாம்.. இந்த டாப்பிக் தான் பரவலாக பேசப்பட்டு வருகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தலைநகரிலும் இலைக்கட்சியில் களையெடுப்பை தொடங்கிவிட்டாராமே இலைக்கட்சி தலைவர்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைவரின் ஊரில் மொரப்பூரை சேர்ந்த மாஜியை பொறுப்பாளராக போட்டிருக்காராம்.. அவரும் வீதி வீதியாக சென்று சோர்ந்து கிடந்த நிர்வாகிகளை தட்டி எழுப்பிக்கிட்டு இருக்காராம்.. கீழ்மட்ட நிர்வாகிகளை மாற்றிவந்த நிலையில், மாவட்ட செயலாளரையே சமயம் பார்த்து தூக்கிட்டாராம்.. அவ்வளவு செல்வாக்கு இலைக்கட்சி தலைவரிடம் இருக்குதாம்.. ஆனால் அவருடன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளவர்கள், இந்த மொரப்பூராருக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுகிறாங்களாம்.. அதே நேரத்தில் இவரது வேலை பொதுச்செயலாளருக்கு ரொம்பவே பிடிச்சிப்போச்சாம்.. யாருக்கு பதவி கொடுக்க வேண்டும், யாரது பதவியை பறிக்கவேண்டும் என்ற பவர்கூட இவரிடம் இருக்குதாம்.. இலைக்கட்சி தலைவர் சொந்த ஊருக்கு வரும்போது, கட்சி நிலவரம் குறித்த ரிப்போர்ட் போகுமாம்.. அவரும் எந்த கேள்வியும் இல்லாமல் கையெழுத்து போட்டிடுவாராம்.. அவ்வளவு செல்வாக்கு அவருக்கு இருக்குதுன்னு இலைக்கட்சி தொண்டர்கள் சொல்றாங்க.. குடும்பத்தை விட்டுவிட்டு, கட்சிக்காகவே மாங்கனி நகரில் வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கும் அந்த மொரப்பூராரின் பவரின் எல்லை நீண்டுக்கிட்டே போகுதாம்.. புறநகரில் தாரமங்கலம், சங்ககிரி உள்ளிட்ட இடங்களிலும் சீரமைப்பை ஏற்படுத்தி வருகிறாராம்.. இவரைப்போல கட்சியில் தனக்கு விசுவாசமாக யாரும் இல்லையேங்குற கவலை இலைக்கட்சி தலைவருக்கு ஏற்பட்டிருக்காம்.. கட்சியில் வேலை செய்வோரை கண்டறிந்து பதவி வழங்குவதில் சிறந்து விளங்குவதால் சென்னைக்கும் அவரை ரகசிய பொறுப்பாளராக போடப்பட்டிருக்காம்.. ஆலந்தூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட ரெண்டு தொகுதியை சீரமைக்கும் வேலை நடந்துக்கிட்டிருக்காம்.. இதனால அங்கிருக்கும் நிர்வாகிகள் கலக்கத்தில் இருக்காங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
The post களையெடுப்பை தொடங்கியிருக்கும் இலைத்தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.