*கடுமையான போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி
ஊட்டி : அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் சுற்றுலா தலங்கள் களை கட்டி காட்சியளிக்கிறது. சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம், ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது.
நிலவக்கூடிய குளுகுளு காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆண்டு முழுவதும் வருகின்றனர். அதிலும் தொடர் அரசு விடுமுறை நாட்கள், பண்டிகை விடுமுறைகள் மற்றும் பள்ளி தேர்வு விடுமுறைகளின்போது இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.
இந்நிலையில் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்து கடந்த 23ம் தேதி முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதே போல் கல்லூரிக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் அரையாண்டு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
தற்போது உள்ளூர் பொதுமக்கள் தவிர்த்து சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வர இ-பாஸ் முறை நடைமுறையில் உள்ளது. இ-பாஸ் விண்ணப்பித்தவுடன் கிடைக்கும் வகையில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் விண்ணப்பித்து, பிறகு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக கடந்த ஒரு வாரமாக ஊட்டியில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் கூட்டம் காணப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று வழக்கமான நாட்களில் வரும் எண்ணிக்கையை விட அதிகமான பயணிகள் கூட்டம் காணப்பட்டது. குழந்தைகள், பெரியவர்கள் தாவரவியல் பூங்கா புல் மைதானங்களில் விளையாடி மகிழ்ந்தனர்.
இதேபோல படகு இல்லத்திலும் கூட்டம் காணப்பட்டது. நகருக்கு வெளியில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களான சூட்டிங் மட்டம், பைக்காரா படகு இல்லம், தெப்பகாடு வளர்ப்பு யானைகள் முகாம், நீர்வீழ்ச்சி, தொட்டபெட்டா சிகரம், தேயிலை பூங்கா உள்ளிட்டவற்றிற்கும், குன்னூர் பகுதியில் சிம்ஸ் பார்க், லேம்ஸ்ராக், காட்டேரி பூங்கா, கோத்தகிரி பகுதியில் நேரு பூங்கா, கொடநாடு காட்சி முனை, டால்பின் நோஸ் போன்ற சுற்றுலா தலங்களுக்கும் சென்று பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிக அளவு வந்த நிலையில் ஊட்டி நகரின் நுழைவாயில் பகுதியான தலையாட்டு மந்து முதல் சேரிங்கிராஸ் வரையிலும், கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா சந்திப்பு வரையிலும், கூடலூர் சாலையில் பிங்கர் போஸ்ட் வரையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து காவல்துறையினர் போக்குவரத்து நெரிசல்களை சீரமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர்.
நாளை மறுநாள் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் அதனை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். அதற்கேற்ப ஊட்டியில் ஓட்டல்கள் ஒளி வெள்ளத்தில் மின்னுகிறது. மேலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒட்டல்கள், காட்டேஜ்களில் பெரும்பாலான அறைகள் நிரம்பியுள்ளன. புத்தாண்டை முன்னிட்டு காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
The post களை கட்டிய சுற்றுலா தலங்கள் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on Dinakaran.