களக்காடு,அக்.24: களக்காடு சுற்று வட்டார பகுதிகளில் காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளிவந்த காட்டு பன்றிகள் மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல் ஊர் பகுதிகளில் முகாமிட்டு விளைநிலங்களை துவம்சம் செய்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர், இந்நிலையில் நேற்று முன் தினம் இரவில் களக்காடு அருகே உள்ள பத்மநேரி பெரியகுளம் பத்துக்காடு விளைநிலங்களுக்குள் காட்டு பன்றிகள் கூட்டம் புகுந்தன. இதைப்பார்த்த விவசாயிகள் அவைகளை விரட்ட முயற்சி செய்தனர். ஆனால் காட்டு பன்றிகள் நாலாபுறங்களில் இருந்தும் விளைநிலங்களுக்குள் புகுந்ததால் விவசாயிகள் செய்வதறியாது தவித்தனர்.
இருப்பினும் சத்தங்களை எழுப்பி விரட்டினர். எனினும் காட்டு பன்றிகள் அங்கு பாவப்பட்டிருந்த 1 டன் எடையுள்ள விதை நெல்களை அழித்து சேதப்படுத்தின. இதனால் விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. தொடரும் காட்டு பன்றிகள் அட்டகாசத்தால் விவசாயிகளின் உயிருக்கும், பயிர்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தினசரி அவைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே காட்டு பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கி அரசாணை வெளியிட வேண்டும். அதுபோல காட்டு பன்றிகளால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடும் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
The post களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு பன்றிகள் மீண்டும் அட்டகாசம் appeared first on Dinakaran.