
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் கல்விக்கட்டணம் செலுத்தாத 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை பள்ளிக்குள் அனுமதிக்காமல் கொளுத்தும் வெயிலில் சாலையில் அமரவைத்த சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்விக்கட்டணம் செலுத்தாததால் அவர்களை பள்ளிக்குள் அனுமதிக்காமல் சாலையில் கொளுத்தும் வெயிலில் அமர வைக்கப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது.
சாலை மற்றும் வயல்களுக்கு அருகில் அசுத்தமான இடத்தில் அமர வைக்கப்பட்டதால், பல மாணவர்கள் கண்ணீருடன் தலைகுனிந்தபடி இருந்துள்ளனர். இதனை வீடியோ எடுத்து மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு அனுப்பிவைத்து மிரட்டியுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணைக்குப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.