நாமக்கல்: கல்வி கடனை முழுமையாக செலுத்திய பிறகும், தனியார் ஏஜென்சி மூலம் தொந்தரவு செய்த ஐஓபி வங்கிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் அனுபிரசாத் (35), திருச்செங்கோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில், கடந்த 2007 நவம்பரில் ரூ.2.57 லட்சம் கல்வி கடன் பெற்றுள்ளார். கடந்த 2017 மார்ச் மாதத்தில், மனோகரன் மற்றும் அனுபிரசாத் ஆகியோரிடம் இருந்து கடனை வசூலிக்க, வங்கி மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பின்னர், தந்தையும் மகனும் வங்கிக்கு சென்று, கடனை ஒரே தவணையில் முடிக்கும் திட்டத்தின் கீழ் பேச்சுவார்த்தை நடத்தி, கடனை செலுத்தி கடன் நிலுவையில் இல்லை என்ற சான்றிதழை பெற்றனர். இதன் பின்னரும் வங்கியால் கடனை வசூல் செய்ய தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, வங்கி திரும்பப் பெறவில்லை. இதனால், கடந்த 2019 செப்டம்பரில் அனுபிரசாத்தும், மனோகரனும் வங்கிக்கு ரூ.5,16,885 செலுத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், 2024ன் தொடக்கத்தில் இருந்து தனியார் (ரிலையன்ஸ் அசட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்சன்) கம்பெனியிலிருந்து பேசுவதாகவும், அரசு வங்கியில் வாங்கிய கடனுக்கு ரூ.7 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டு சிலர் மிரட்டியுள்ளனர். வங்கி கடனை வசூல் செய்த போதும், ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கை திரும்பப் பெறவில்லை என்பதும், கடன் ஒப்பந்தத்தை அந்த தனியார் கம்பெனிக்கு வங்கி விற்று விட்டதும் அனுபிரசாத்துக்கு தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தையும், மகனும் வங்கியின் மீதும், அந்த தனியார் கம்பெனி மீதும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரணைக்கு வங்கி மற்றும் அந்த தனியார் கம்பெனி சார்பில் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ், உறுப்பினர்கள் ரமோலா, லட்சுமணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வங்கியின் சேவை குறைபாட்டால், வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ.5 லட்சத்தை, 4 வாரத்திற்குள் வங்கி வழங்க வேண்டும்.
கடன் நிலுவை இல்லை என்று சான்று வழங்கி விட்டு, கடனை வசூலிக்க தனியார் கம்பெனிக்கு அதிகாரம் அளித்தது தவறு என்று, வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு 4 வாரங்களுக்குள் வங்கி கடிதம் வழங்க வேண்டும். தவறினால் கூடுதல் இழப்பீடாக, ஒவ்வொரு நாளும் ரூ.5,000 வீதம், வங்கி செலுத்த வேண்டும். இந்த கல்விக் கடன் கணக்கு தொடர்பான வசூல் நடவடிக்கைகள் எதனையும், வழக்கு தாக்கல் செய்துள்ளவர்கள் மீது தனியார் கம்பெனி மேற்கொள்ளக்கூடாது என நேற்று தீர்ப்பளித்தனர்.
The post கல்விக்கடனை வசூலித்த பிறகும் தனியார் ஏஜென்சி மூலம் மிரட்டிய ஐஓபி வங்கிக்கு ரூ.5 லட்சம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.