கல்வி நிதியை தமிழகத்துக்கு உடனே வழங்கக்கோரி ஒன்றிய அமைச்சருக்கு எதிராக திமுக மாணவரணி போராட்டம்

4 hours ago 2

சென்னை: தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டுமே ரூ.2,152 கோடி கல்வி நிதியை விடுவிப்போம் என்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒன்றிய அமைச்சருக்கு எதிராக பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். திமுக உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டங்களில் இறங்கியுள்ளன.

திமுக மாணவர் அணி சார்பிலும், மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஒன்றிய பாஜ அரசின் இந்தி திணிப்பு முயற்சியைக் கண்டித்தும், கல்வி நிதி ஒதுக்க மறுப்பதைக் கண்டித்தும் திமுக மாணவர் அணி, மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு தமிழ்நாடு கூட்டமைப்பின் சார்பிலும் கடந்த 25ம் தேதி தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று சென்னை சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வருவதாக இருந்தது. அவர் சென்னை வந்தால் அவருக்கு எதிராக போராட்டம் நடைபெறும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகளின் மாணவர் அமைப்பினர் அறிவித்தனர். இதனால் தர்மேந்திர பிரதான் வருகை ரத்து செய்யப்பட்டது. அவருக்கு பதில், ஒன்றிய இணை அமைச்சர் சுகந்த மஜூம்தார் நேற்று காலையில் சென்னை வந்தார்.

அவருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடந்தது. திமுக மாணவர் அணி செயலாளர் எழிலரசன் தலைமை தாங்கினார். இதில் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். போராட்டத்தில் பேசிய எழிலரசன், ‘ஒன்றிய அரசு மறைமுகமாக இந்தி – சமஸ்கிருதத்தை தமிழ்நாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்து வருகிறது.

கல்வி நிதியை வழங்க மாட்டோம் என ஆணவத்தோடு ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் பேசுகிறார். இவரின் இந்த ஆணவப் போக்கை கண்டித்து பிப். 25ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாபெரும் போராட்டம் நடந்தது. தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்வி நிதியை உடனே விடுவிக்க வேண்டும். ஒன்றிய அரசு சர்வாதிகாரத்திறகும் மிரட்டலுக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம்” என்றார்.

The post கல்வி நிதியை தமிழகத்துக்கு உடனே வழங்கக்கோரி ஒன்றிய அமைச்சருக்கு எதிராக திமுக மாணவரணி போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article