ஒன்றிய பாஜ அரசு புதிய கல்வி கொள்கையை கொண்டு வந்து, அதில் அனைத்து மாநிலங்களையும் வலுக்கட்டாயமாக சேர்த்திட கடந்த சில ஆண்டுகளாகவே முயன்று வருகிறது. இக்கல்வித்திட்டத்தை ஏற்க மறுக்கும் மாநிலங்களை எந்த வகையில் எல்லாம் பழிவாங்க முடியுமோ, அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2022ம் ஆண்டு பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன்மூலம் ரூ.27 ஆயிரத்து 360 கோடி செலவில், அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மேம்படுத்தப்பட உள்ளன.
இதில் 60 சதவீதம் ஒன்றிய அரசின் பங்களிப்பும், 40 சதவீதம் மாநில அரசின் பங்களிப்பும் இருக்கும். இத்திட்டத்தின் மூலம் 1.87 கோடி குழந்தைகள் பயன்பெற உள்ளன. இத்திட்டமானது புதிய கல்வி கொள்கையின் கீழ் செயல்பாட்டுக்கு வருவதால், இத்திட்டத்தில் இணைய தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை ஒன்றிய கல்வி அமைச்சகம் நிறுத்தியுள்ளது. இதில் பஞ்சாபிற்கு 515 கோடி, மேற்கு வங்கத்திற்கு ஆயிரம் கோடி, தமிழ்நாட்டிற்கு 2 ஆயிரத்து 152 கோடி நிதி நிறுத்தப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் இந்த ஓரவஞ்சனை போக்கிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். முந்தைய ஆண்டுக்கான நிதியை இன்னமும் விடுவிக்காத நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் அனுப்பி வைக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கும் பதில் இல்லை. புதிய கல்வி கொள்கை குறித்த விவாதங்கள் உள்ள நிலையில், கல்வி நிதியை நிறுத்தி, அதையும், இதையும் ஒப்பிடும் ஒன்றிய அரசின் போக்கிற்கு முதல்வர் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். தமிழகத்திற்கான கல்வி நிதியை, தனக்கு வேண்டிய பிற மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு பிரித்து கொடுத்து வருகிறது.
தமிழகம் மீதான அடக்கு முறையை ஒன்றிய பாஜ அரசு கடந்த பல ஆண்டுகளாகவே மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் கால்பதித்தும், தமிழகத்தில் தொடர்ந்து பாஜ புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், ஒன்றிய அரசு தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தி தமிழகத்தின் கண்களில் சுண்ணாம்பு தடவிக் கொண்டே இருக்கிறது. ஒரே நாடு, ஒரே மொழி என பாஜவின் கோஷம் எழுந்தபோது தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை எப்படியாவது தமிழகத்தில் நுழைத்து விடலாம் என கனவு கண்ட பாஜவிற்கு, புதிய கல்வி கொள்கை ஒரு வாய்ப்பாக தென்பட்டது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இப்போது நிதியை நிறுத்தி ஒன்றிய அரசு வேடிக்கை காட்டுகிறது. தமிழ்நாட்டு மாணவர்களின் நலனுக்கு பயன்படுத்த வேண்டிய பெரும் தொகை தற்போது மற்ற மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
உரிமைகளுக்காக போராடும் தமிழ்நாட்டு மாணவர்களை ஏதேனும் ஒரு வகையில் தண்டிக்கும் எண்ணத்துடன் பாஜ அரசு இப்படி நடந்து கொள்வதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அரசியல் சாசனப்படி அங்கீகரிக்கப்பட்ட மொழிகளை புறக்கணித்து, இந்தியாவை இந்துஸ்தானாகவோ அல்லது இந்திஸ்தானாகவோ மாற்றும் முயற்சிகளில் பாஜ இறங்கினால், திராவிட மண்ணில் இருந்து பதிலடி நிச்சயம் கிடைக்கும். ஒன்றிய அரசு தனது சுய அரசியல் லாபங்களை தள்ளி வைத்துவிட்டு, தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கல்வி நிதியை முறையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
The post கல்வி நிதியில் ஓரவஞ்சனை appeared first on Dinakaran.