சென்னை,
கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் நடந்த கள்ளச்சாராய சம்பவத்தில் 69 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். போலீஸ் நிலையம், நீதிமன்றம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் அருகிலேயே கள்ளச்சாராய விற்பனை நடந்தது கடும் விமர்சனங்களை கிளப்பியது. இதற்கு காரணம், கள்ளச்சாராயத்தில் போதைக்காக அதிக அளவு மெத்தனால் கலந்ததுதான் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சாராயம் அருகிலுள்ள கல்வராயன் மலையில் காய்ச்சப்பட்டதாகும்.
கல்வராயன் மலை ஆயிரத்துக்கு மேற்பட்ட சதுர கிலோ மீட்டர் பரப்பில், 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. சின்ன கல்வராயன் மலை, பெரிய கல்வராயன் மலை என்று இருபிரிவாக இருக்கும் இந்த மலையின் பெரும்பாலான பகுதிகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் சில பகுதிகள் சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும் இருக்கிறது. இந்த மலைப்பகுதி இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது, நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு, 1976-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதிதான். சுதந்திரம் அடைந்து 29 ஆண்டு காலத்துக்கு பிறகுதான், ஜனநாயக நாட்டின் ஒரு பகுதியானது.
கிருஷ்ண தேவராயர் ஆட்சி காலத்தில் இந்த கல்வராயன் மலையிலுள்ள 100 மலைக்கிராமங்கள் சடய கவுண்டன், குரும்ப கவுண்டன், ஆர்ய கவுண்டன் என்ற 3 ஜாகிர்தார்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த நேரத்தில், இந்த 3 ஜாகிர்தார்களும் இந்தியாவோடு இணைய மறுத்துவிட்டார்கள். இந்த மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்கு தேவையான கடுக்காய், கருவேலம் மர பட்டைகள் நிறைய கிடைக்கிறது. ஆங்காங்கு சிறிய நீரோடைகளும் இருப்பதால், குறைந்த செலவில் சாராயம் காய்ச்சுவது அங்கு பிரதான தொழிலாக இருந்தது.
தற்போது, கள்ளச்சாராயம் அருந்தியதால் 69 பேர் பலியான நிலையில், இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தானாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்து, "கல்வராயன் மலையில் உடனடியாக கல்வி, வேலைவாய்ப்பு, சாலை, போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்கவேண்டும்" என்று உத்தரவிட்டனர். இப்போது, இந்த வழக்கு விசாரணை முடிந்து நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி விசாரித்து அளித்த தீர்ப்பில், சாராய வியாபாரிகளுக்கும், போலீசுக்கும் இடையே இருக்கும் தொடர்பு புலப்படுகிறது என்று கடுமையாக சாடிவிட்டு, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்கும் நிலையில் இனி சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டுள்ளனர்.
"இந்த மலைவாழ் மக்களுக்கு வேறு தொழில் தெரியாததால், கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில், இந்த மலைப்பகுதியை சுற்றுலா தலமாக்கவேண்டும். இங்கு 10 நீர்வீழ்ச்சிகள் இருக்கின்றன. அதற்கு போகக்கூட சரியான பாதை இல்லை. மலையேற்ற பயிற்சிக்கும் உகந்த இடம் இது. எனவே, தங்கும் விடுதி, உணவகங்கள், வாகன போக்குவரத்துக்கான சாலை வசதி என அனைத்து வசதிகளையும் செய்யவேண்டும். அப்பகுதி மக்களுக்கு மறுவாழ்வு கொடுத்தால் நிச்சயமாக கள்ளச்சாராய தொழிலில் இருந்து மீட்க முடியும்" என்கிறார், ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி.யும், இந்தப் பகுதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக 4 ஆண்டுகள் பணியாற்றியவருமான மு.ரவி.
மத்திய - மாநில அரசுகள் கல்வராயன்மலை பகுதி மக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அவர்களின் மறுவாழ்வுக்கான திட்டங்களை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். அரசின் அத்தனை நலத்திட்டங்களும் அங்குள்ள மக்களையும் போய்ச் சேரவேண்டும்.