கல்லை போட்டு முகத்தை சிதைத்து லாரி உரிமையாளர் கொடூர கொலை

3 hours ago 1

*4 பேர் கைது

கந்தர்வக்கோட்டை : கந்தர்வகோட்டை அருகே தண்ணீர் லாரி உரிமையாளரை கொடூரமாக கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த வீரடிப்பட்டியை சேர்ந்தவர் ராஜகோபால்(50). இவர் தனக்கு சொந்தமான லாரியில் குடிநீர் ஏற்றி சென்று வீடு மற்றும் கடைகளுக்கு விற்பனை செய்யும் தொழில் நடத்தி வந்தார். நேற்று காலை வீரடிப்பட்டியில் தண்ணீர் நிரப்பி கொண்டு கந்தர்வகோட்டை நோக்கி லாரியை ராஜகோபால் ஓட்டி வந்தார்.

கந்தர்வகோட்டை சாலையில் லாரி வந்தபோது 4 மர்ம நபர்கள் வழிமறித்தனர். இதனால் லாரியை நிறுத்தி விட்டு இறங்கிய ராஜகோபாலை 4 பேரும் சரமாரியாக தாக்கினர். பின்னர் ராஜகோபாலை கீழே தள்ளி விட்டு அரளைக்கல்லை தூக்கி அவரது முகத்தில் போட்டனர். இதில் முகம் சிதைந்து அந்த இடத்திலேயே ராஜகோபால் உயிரிழந்தார். இதையடுத்து 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள், ராஜகோபால் இறந்து கிடப்பதை பார்த்து கந்தர்வகோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் டிஎஸ்பி அப்துல் ரகுமான் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராஜகோபால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே ராஜகோபால் கொலை செய்யப்பட்ட தகவலறிந்ததும் வீரடிப்பட்டி பொதுமக்கள், ராஜகோபாலின் உறவினர்கள் சம்பவ இடத்தில் திரண்டு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கொலை குற்றவாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

அதன்பேரில் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இது தொடர்பாக கந்தர்வகோட்டை அரவம்பட்டியை சேர்ந்த தாமரைச்செல்வன்(55), தஞ்சை மாவட்டம் செங்கிபட்டியை சேர்ந்த நல்லாண்டவர் (22), கந்தர்வகோட்டை அருகே உள்ள கிள்ளுக்கோட்டையை சேர்ந்த இளையராஜா (40), கருப்பையா (37) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் டிஎஸ்பி அப்துல் ரகுமான் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சுகுமார் தலைமையில் தனிப்படையினர் 3 மணி நேரத்தில் 4 பேரையும் கைது செய்தனர். போலீசார் முதற்கட்ட விசாரணையில் பணம், கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை நடந்ததாக தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கல்லை போட்டு முகத்தை சிதைத்து லாரி உரிமையாளர் கொடூர கொலை appeared first on Dinakaran.

Read Entire Article