கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்ற வழக்கு மாஜி டிஜிபி மகனின் முக்கிய கூட்டாளி நைஜீரிய வாலிபர் கைது: சென்னையில் பெண் தலைவி சிக்கினார்

1 week ago 2

சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் டிஜிபி மகன் அருணின் நெருங்கிய கூட்டாளியான நைஜீரியாவை சேர்ந்த வாலிபரை தனிப்படை போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர். மேலும், சென்னையில் போதைப்பொருள் மொத்த விற்பனையின் முக்கிய பெண் ஏஜென்டையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். சென்னை பெருநகர காவல்துறை சார்பில் ‘போதையில்லா மாநகரம்’ உருவாக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

சென்னை பெருநகர காவல்துறையில் இதுவரை இல்லாத வகையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் கடத்தல் நபர்களை கைது செய்யும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் தனது மேற்பார்வையில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு என்ற அமைப்பை உதவி கமிஷனர் தலைமையில் தொடங்கியுள்ளார். இந்த தனிப்படையினர் சென்னை பெருநகர காவல் எல்லையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, கடந்த மாதம் 24ம் தேதி வெளிநாடுகளில் இருந்து சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலிடம் இருந்து உயர் ரக போதைப்பொருட்களை கடத்தி வந்து சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த முன்னாள் டிஜிபி ரவீந்தரநாத் மகனும் அமெரிக்காவில் படித்த மென்பொறியாளருமான அருண் (40) மற்றும் அவரது நண்பரான முடிச்சூரை சேர்ந்த மெக்கல்லன் (42), நைஜீரியாவை சேர்ந்த ஈஸ் ஜான் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து 5 கிராம் ஆம்பெட்டமைன், ரூ.1.02 லட்சம் ரொக்கம், போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்திய 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் டிஜிபியின் மகன் அருணுக்கு நெருக்கமான நண்பரும், வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தி வரும் நபரான நைஜீரியாவை சேர்ந்த ஒனுஹா சுக்வு (38) என்பவரை தனிப்படையினர் கர்நாடக மாநிலம் பெங்களூரு கம்மனஹல்லி பகுதியில் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கிராம் மெத்தபெட்டமைன், 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட ஒனுஹா சுக்வுவிடம் நடத்திய விசாரணையில், ஒவ்வொரு மாதமும் முன்னாள் டிஜிபி மகன் அருண் கூறும் ஆர்டர் பெயரில் மொத்தமாக சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலிடம் இருந்து போதைப்பொருட்கள் கடத்தி வந்து சென்னையில் அருணிடம் வழங்கி வந்தது தெரியவந்தது. இந்த வழக்கில் அருணுக்கு விற்பனை ஏஜென்ட்களாக இருந்த கல்லூரி மாணவர்கள் பலரை கைது செய்ய தனிப்படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அதேபோல் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தனிப்படையினருக்கு கல்லூரி மாணவர்களுக்கு ஆர்டர் பெயரில் போதைப்பொருட்கள் கொண்டு செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படையினர் நேற்று முன்தினம் இரவு சென்னை மண்ணடி ஜோன்ஸ் தெருவில் அதிரடி வாகன சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பைக்குகளில் வந்த 6 பேரை தனிப்படையினர் மடக்கினர். போலீசார் தங்களை பிடித்து விடுவார்கள் என்று பைக்குடன் அவர்கள் தப்பிச் சென்றனர்.

ஆனால் தனிப்படையினர் விடாமல் துரத்தி 6 பேரில் 4 பேரை பிடித்து சோதனை செய்தனர். 2 பேர் தப்பிவிட்டனர். அதில், 2 கிராம் மெத்தபெட்டமைன் இருந்தது தெரியவந்தது. உடனே தனிப்படையினர் 4 பேரையும் எஸ்பிளனேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வம் விசாரணை நடத்திய போது, கொடுங்கையூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த தினேஷ் பிரதாப் (23), தண்டையார் பேட்டை வ.உ.சி.நகர் செல்வி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சந்தோஷ் (18), புழல் லட்சுமி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த பிரவீன் (20), பழைய வண்ணாரப்பேட்டை அப்பாசாமி காலனி 3வது தெருவை சேர்ந்த தேஜஷ் (18) என்பது தெரியவந்தது.

பிடிபட்ட 4 பேரும் அளித்த தகவலின்படி, போலீசார் விசாரணை நடத்திய போது, கல்லூரி மாணவர்களுக்கு மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருட்களை சென்னை முழுவதும் வாட்ஸ்அப் குழு மூலம் மணலி சர்.சி.வி.ராமன் தெருவை சேர்ந்த பாத்திமா மவுபியா (25) என்ற இளம்பெண் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 4 பேரும் போதைப்பொருட்கள் ஆர்டர் பெயரில் கல்லூரி மாணவர்களுக்கு ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து சென்று வழங்கி வந்ததும், அதோடு இல்லாமல் இரவு நேரங்களில் மதுபான விடுதிகள் மற்றும் பப்புகளுக்கு ஆர்டர் பெயரில் மவுபியா உத்தரவுப்படி போதைப்பொருட்கள் கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மவுபியாவின் தந்தை அக்பர் அலி போதை பொருள் கடத்தல் ஆசாமி ஆவார். ஏற்கனவே போதைபொருள் கடத்தல் வழக்கில் 13 ஆண்டுகள் தண்டணை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார். தந்தையின் தொழிலை 25 வயதான மவுபியா தற்போது செய்து வந்ததும் தந்தையிடம் பணியாற்றிய கடத்தல் ஆசாமிகளை வைத்தே தற்போதும் சென்னையில் போதைபொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
சென்னையில் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் வகையில் அதிரடி சோதனை நடத்தி போதை பொருள் ஏஜென்ட்களை கைது செய்து வரும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவுக்கு போலீஸ் கமிஷனர் அருண் பாராட்டு தெரிவித்துள்ளார்.

* செல்போன்களில் இருந்து போதைப்பொருள் விற்பனை முகவர்கள் பட்டியல் எடுப்பு
மவுபியாவின் தந்தை அக்பர் அலி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் 12 ஆண்டுகள் தண்டனை பெற்று தற்போது 3 ஆண்டுகளாக புழல் சிறையில் உள்ளார். தனது தந்தை செய்து வந்து போதைப்பொருள் கடத்தல் தொழிலை, 25 வயதே ஆன பாத்திமா மவுபியா துணிச்சலுடன் தந்தையின் கூட்டாளிகளுடன் இணைந்து சென்னை முழுவதும் உயர் ரக கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் ஆர்டர் பெயரில் விற்பனை செய்யும் முக்கிய ஏஜென்டாக இருந்து வந்தும் விசாரணையில் தெரியவந்தது.

அதைதொடர்ந்து முக்கிய போதைப்பொருள் விற்பனை ஏஜென்டாக செயல்பட்டு வந்த பாத்திமா மவுபியாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. பாத்திமா மவுபியாவின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து, போதைப்பொருள் விற்பனை முகவர்கள் யார் யார் என்பது குறித்து பட்டியல் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் போலீசார் பிடியில் இருந்து தப்பி சென்ற அசார் மற்றும் டேனியை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

The post கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்ற வழக்கு மாஜி டிஜிபி மகனின் முக்கிய கூட்டாளி நைஜீரிய வாலிபர் கைது: சென்னையில் பெண் தலைவி சிக்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article