பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு கல்லூரி அருகே சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். மேலும் அவர்களிடம் சோதனை நடத்திய போது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, 2 பேரையும் கைது செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் பாபா பக்ருதீன் மற்றும் மன்சூர் என தெரிந்தது. இவர்கள் இருவரும் ஆந்திராவில் குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி, அவற்றை பெங்களூருவுக்கு கடத்தி வந்துள்ளனர்.
பின்னர் அந்த கஞ்சாவை சிறிய பொட்டலங்களில் அடைத்து நகரில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்களுக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது. அவர்கள் இருவரிடம் இருந்து 2½ கிலோ கஞ்சா, 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். கைதான பாபா பக்ருதீன், மன்சூர் மீது எலக்ட்ரானிக் சிட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.