கல்லுருண்டை… சத்துகள் நிரம்பிய பாரம்பரிய நெல் ரகம்!

3 hours ago 1

இந்தியாவைச் சுற்றி இருக்கும் அண்டை நாடுகளான சீனா, இந்தோனேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் அரிசியைத்தான் பிரதான உணவாக உண்ணுகிறார்கள். அதாவது உலக மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் அரிசி உணவைத்தான் எடுத்துக் கொள்கிறார்கள். முக்கியமாக நம் நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற சரியான உணவு அரிசிதான். தென்மாவட்டங்களில் நடக்கும் அகழ்வாராய்ச்சியில், 2500 வருடங்களுக்கு முன்பு சேமித்து வைக்கப்பட்ட அரிசிப் பெட்டகங்களை கண்டெடுத்ததில் அந்த அரிசி பூச்சி, வண்டு இல்லாமல் இன்றுவரையிலும் கெட்டுப்போகாமல் இருப்பதைப் பார்த்தால் சிறந்த டெக்னாலஜியைப் பயன்படுத்தி பயிர்களை விளைவித்து அறுவடை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று ஆச்சரியப்படுகிறார்கள் அகழ்வாராய்ச்சியாளர்கள். இதுகுறித்த தகவல்கள் இப்போது வெளிவரத் துவங்கி இருக்கின்றன. இதன்மூலம் தமிழர்கள் விவசாயத்தில் பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியதும் ஆராய்ச்சியின் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது.

அந்த வகையில் நமது பாரம்பரிய நெல்ரகங்களில் இயற்கையாகவே பூச்சிக்கட்டுப்பாட்டையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற்றிருக்கும் பயிர்கள் பல இருக்கின்றன. அவற்றை சாகுபடி செய்தாலே நல்ல மகசூல் கிடைக்கும். அந்த வகையில் சிறப்பு பெற்ற பாரம்பரிய நெல் ரகங்களில் ஒன்றுதான் கல்லுருண்டை. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டப் பகுதிகளில் அதிகமாக விளையக்கூடிய நெல் ரகங்களில் இந்தக் கல்லுருண்டையும் ஒன்று. குறுகிய காலப் பயிரான கல்லுருண்டை தாளடி, பிசாணம் எனப்படும் பின் சம்பா (பட்டம்) பருவ காலமான செப்டம்பர் 15 முதல் பிப்ரவரி 14 முடிய உள்ள இடைப்பட்ட காலத்திலும், நவரை பட்டம் எனப்படும் டிசம்பர் 15 முதல் மார்ச் 14 வரையிலான காலத்திலும் பயிரிட ஏற்றது. கல்லுருண்டை நெல் ரகம் சராசரியாக 126 செ.மீ உயரம் வரையில் வளரும். இந்த நெல்லை நடவு செய்வதற்கு முன்பு புழுதி பறக்க உழவு ஓட்ட வேண்டும். ஏற்கனவே அறுவடை செய்த பயிர்களின் வேர்ப் பகுதி இருந்தால் அதையும் சேர்ந்து நிலத்தில் உழவு ஓட்ட வேண்டும். இவை நிலத்திற்கு நல்ல பயிர் ஊக்கியாகவும், உரமாகவும் இருக்கும்.

இதன்பின்பு நிலத்தில் தண்ணீர் விட்டு மண் நல்ல ஈரப்பதம் ஆகும் வரையில் நிலத்தை ஊறவைக்க வேண்டும். பின்னர் இதில் ஆட்டு எரு, மாட்டு எருவைக் கொட்டி மீண்டும் ஒருமுறை உழவு ஓட்டி நிலத்தில் விதை நெல்லைத் தூவ வேண்டும். கல்லுருண்டை களிமண் இருக்கும் கலப்பு மண் வகைக்கு மிகவும் ஏற்றது. இந்த வகை மண்ணில் கல்லுருண்டை மிகச் சிறப்பாக வளரக்கூடியது. இந்த நெற்பயிர் வறட்சி, பூச்சி மற்றும் உப்புத்தன்மையை எதிர்க்கும் ஆற்றலை இயற்கையாகவே கொண்டிருக்கிறது. கல்லுருண்டை நெல் மணி கறுப்பு நிற மங்கிய கோடுகளுடன் காணப்படும், மஞ்சள் நிறமுடையது. மேலும் இதன் நெல் மணி சற்று தடித்த வெளிறிய மஞ்சள் நிறமுடையதாக இருக்கும். இது 120 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது.

தென்னை விவசாயிகளுக்கு நேரடி பயிற்சி!

விவசாயத்தில் நவீன அறிவியல் நுட்பங்களை ஆராய்ந்து பின்பற்றும் முயற்சியாக திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 37 தென்னை விவசாயிகளின் குழு கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தாவர உயிரி தொழில்நுட்பத் துறைக்குச் சென்று பார்வையிட்டனர். தென்னை மற்றும் வாழைச் சாகுபடியில் அதிநவீன திசு வளர்ப்பு முறைகள் பற்றி நேரடியாக அறிந்துகொள்ளும் வகையில் அவர்களின் பயணம் திட்டமிடப்பட்டு இருந்தது. தாவர உயிரி தொழில்நுட்பத் துறையின் பேராசிரியர் முனைவர் ராஜகோபால் மற்றும் முனைவர் ரேணுகா ஆகியோர் மேற்பார்வையில் திசு வளர்ப்பு தொழில்நுட்பத்தின் பயன்பாடு பற்றியும், அதன் பல்வேறு நன்மைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இந்தக் கலந்துரையாடலின்போது உள்ளூர் ரகங்களுக்கு பதிலாக திசு வளர்ப்புக் கன்றுகளை பயன் படுத்துவதற்கான பொருளாதார சாத்தியக்கூறு குறித்து விவசாயிகள் அறிந்துகொண்டனர். தாவர உயிரி தொழில்நுட்பத் துறையில் நடைபெற்றுவரும் ஆராய்ச்சிப் பணிகள் குறித்தும், விவசாயிகளின் தேவைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

குடிமங்கலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாகிகள் இந்தப் பயணம் குறித்து கூறுகையில், இந்தப் பயணம் ஒரு மதிப்புமிக்க கற்றல் அனுபவமாக இருந்தது. ஆரோக்கியமான மற்றும் வலுவான தாவர இருப்பை உருவாக்க திசு வளர்ப்பு எங்கள் விவசாய நடைமுறை களில் எவ்வாறு ஒருங்கிணைக்கப்படலாம் என்பது பற்றி எங்களுக்கு நல்ல புரிதல் கிடைத்திருக்கிறது என்றனர். இந்த நிகழ்வை தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர் டாக்டர் என்.செந்தில் மற்றும் தாவர உயிரி தொழில்நுட்பத் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் அருள் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

The post கல்லுருண்டை… சத்துகள் நிரம்பிய பாரம்பரிய நெல் ரகம்! appeared first on Dinakaran.

Read Entire Article