சென்னை : ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ நாளை தொடங்க உள்ள நிலையில், இதுவரை பெறப்பட்ட மனுக்கள் குறித்து தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர் அமுதா ஐ.ஏ.எஸ் விளக்கம் அளித்தார். அதில், “நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதலமைச்சர் சிதம்பரத்தில் தொடங்கி வைக்கிறார். மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே அரசின் சேவைகளை கொண்டு செல்வது இத்திட்டத்தின் நோக்கம். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடப்பது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் வரும் மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காண வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.
இதனை அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தி உள்ளோம். கடந்த 4 ஆண்டுகளில் 1.05 கோடி கோரிக்கை மனுக்கள் பெறப்பட்ட நிலையில் 1.01 கோடி மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து பட்டா மாற்றம், மின் இணைப்பில் பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் வருகின்றன. ஓய்வூதியம், இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை குறித்து கோரிக்கை மனுக்கள் வரபெற்றுள்ளன. கோரிக்கை மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும். சில மனுக்களுக்கு அன்றே தீர்வு காணப்பட்டுவிடும். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 10,000 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. நகர்ப்புறங்களில் 3,738 முகாம்கள், ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்கள் நடைபெறவுள்ளன.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் நகர்ப்புறத்தில் 43 சேவைகள், ஊரகப் பகுதிகளில் 46 சேவைகள் வழங்கப்படவுள்ளன. முகாம் நடக்கும் ஒரு வாரத்துக்கு முன்பு வீடு, வீடாக சென்று மக்களுக்கு தெரியப்படுத்தப்படும். மக்கள் கொண்டுவர வேண்டிய ஆவணங்கள் உள்ளிட்டவை குறித்து தெரிவிக்கப்படும். ஆவணங்களை முறையாக மக்கள் கொண்டுவந்தால் உடனடியாக மனு மீது தீர்வு காணப்படும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பெறப்படும். மகளிர் உரிமைத் தொகை பெறாத பெண்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து முகாம்களில் கொடுக்கலாம்.”இவ்வாறு தெரிவித்தார்.
The post கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பெறப்படும் :அமுதா ஐ.ஏ.எஸ் விளக்கம் appeared first on Dinakaran.