சென்னை: கலைஞர் பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் கொண்டு வர சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடிய நிலையில் கேள்வி நேரம் நடைபெற்று வந்தது. அப்போது சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க சட்டப்பேரவையில் சிறப்பு கவனம் ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க அனைத்து கட்சிகளும் சட்டப்பேரவையில் ஆதரவு தெரிவித்தனர். காங்கிரஸ், பாமக, விசிக, தவக, மமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மதிமுக கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சட்டப்பேரவையில் பேசியதாவது: “எல்லா திறமையும் பெற்ற ஒரு தலைவராக ஆளுமையாக வாழ்ந்தார். இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கலைஞர்” என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது என்றால் அது கலைஞர் போட்ட விதை என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
ஜி.கே மணி பேசியதாவது; எளிய மக்களின் துயர் துடைத்தவர் கலைஞர், பல்கலைக்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். எந்த தயக்கமும் வேண்டாம், எல்லா தலைவர்களின் பெயர்களிலும் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. கலைஞர் பெயரிலும் பல்கலைக்கழகம் கொண்டு வர வேண்டும்” என்று கேட்டுக்கொள்கிறேன். என்று பேசினார்.
கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் வெளியிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை; நம்முடைய உறுப்பினர்கள் கு.செல்வப்பெருந்தகை , ஜி.கே. மணி, சிந்தனைச் செல்வன், வீ.பி. நாகைமாலி, இராமச்சந்திரன், டாக்டர் சதன் திருமலைக்குமார், முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, ரா.ஈஸ்வரன், தி.வேல்முருகன் மற்றும் பின்னர், தொடர்ந்து நம்முடைய அவை முன்னவர், அதேபோல், பேரவைத் தலைவர் ஆகியோர் விதி எண் 55-ஐப் பயன்படுத்தி நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுடைய பெயரால் ஓர் பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டுமென்று தங்களுடைய கருத்துக்களை உணர்வுபூர்வமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பள்ளிகளாக இருந்தாலும், கல்லூரிகளாக இருந்தாலும், அவையெல்லாம் இன்றைக்கு வளர்ந்து, மேலோங்கி மற்ற மாநிலங்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக, ஏன், உலக அளவிலே இன்றைக்குப் பாராட்டப்படக் கூடிய அளவிற்கு வளர்ந்திருக்கின்றன. நாட்டிலேயே முதல் இடத்திற்கு வந்திருக்கக்கூடிய அந்தக் கல்வி நிலையங்கள் எல்லாம் உருவாவதற்குக் காரணமாகப் பல்வேறு தலைவர்கள் இருந்தாலும், அவர்களிலே முக்கியமான தலைவர்களில் ஒருவராக நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் விளங்கிக் கொண்டிருக்கிறார்.
அப்படி கல்வியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டிருக்கக்கூடிய, பல்வேறு திட்டங்களை உருவாக்கித் தந்திருக்கக்கூடிய நம்முடைய தலைவர் கலைஞர் எல்லோரும் இங்கே குறிப்பிட்டிருப்பதைப்போல, பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் விரைவில் அவர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருக்கக்கூடிய கும்பகோணத்திலே நம்முடைய உறுப்பினர் ஜி.கே. மணி குறிப்பிட்டதைப்போன்று, எந்தவிதத் தயக்கமுமின்றி நான் அறிவிக்கிறேன். தலைவர் கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்ற உறுதியான செய்தியை மீண்டும் சொல்கிறேன்; எந்தவித தயக்கமுமின்றி இதைச் சொல்கிறேன் என்று சொல்லி நான் அமைகிறேன். இவ்வாறு பேசினார்.
The post கலைஞர் பெயரில் விரைவில் பல்கலைக்கழகம்: சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்!!.. appeared first on Dinakaran.