கலைஞரின் மருமகனும் முரசொலி மாறனின் சகோதரருமான முரசொலி செல்வம் காலமானார்

1 month ago 7

* உடலை கட்டிப் பிடித்து கதறி அழுத முதல்வர் மு.க.ஸ்டாலின்
* அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், பொதுமக்கள் நேரில் மரியாதை

சென்னை: திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், முன்னாள் முதல்வர் கலைஞரின் மருமகனும், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் தம்பியுமான பத்திரிகையாளர் முரசொலி செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 84. முரசொலி செல்வத்தின் உடல் நேற்று மாலை சென்னை கொண்டுவரப்பட்டது. அவரது உடலை முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டிப் பிடித்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் மருமகனும், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் தம்பியும், தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தங்கை செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் (84), பெங்களூரில் வசித்து வந்தார். முரசொலி செல்வம் வயது முதிர்வு, முதுமை காரணமாக அவரது இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார். நேற்று காலை அவர் வழக்கம் போல் முரசொலி நாளிதழுக்காக குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்தார். பின்னர் ஓய்வு எடுப்பதற்காக சென்றார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமானார். அவரது மறைவை கேட்டு குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மறைந்த முரசொலி செல்வம், திமுகவின் நாளிதழான முரசொலியின் வளர்ச்சிக்காக 50 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். நிர்வாக ஆசிரியராக பொறுப்பு வகித்துள்ளார். முரசொலியில் ‘‘சிலந்தி” எனும் புனைப் பெயரில் நகைச்சுவையாகவும், புள்ளிவிவரத்துடனும், ஆதாரத்துடனும் எழுதி வந்தார். பல்வேறு தமிழ் திரைப்படங்களையும் தயாரித்தவர் முரசொலி செல்வம்.

அதிமுக ஆட்சியில் அடக்குமுறைக்கு அஞ்சாமல், உரிமை மீறல் விவகாரத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூண்டில் ஏறி நின்று துணிச்சலாக தனது வாதங்களை முன் வைத்தவர் முரசொலி செல்வம். மறைந்த முரசொலி செல்வத்தின் உடல் ஆம்புலன்ஸில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்கு நேற்று மாலை 6.30 மணியளவில் கொண்டு வரப்பட்டது. சென்னை கோபாலபுரத்திற்கு அவரது உடல் வந்ததும், அவரது உடலை கட்டிப்பிடித்து திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கதறி அழுதார். அவரை அருகில் இருந்த அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் கூறி தேற்றினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் விட்டு அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது. முதல்வர் அழுவதைப் பார்த்து அங்கிருந்தவர்களும் அழுதனர். இதனால், அந்த இடமே சோகமயமானது. தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் கண்ணீர் மல்க உடலுக்கு மரியாதை செலுத்தினார். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனும், தனது சித்தப்பாவின் உடலுக்கு கண்ணீர் மல்க மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து முரசொலி செல்வத்தின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சோகத்துடன் அமர்ந்திருந்தார். அஞ்சலி செலுத்த வந்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோபாலபுரம் இல்லத்திற்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து முரசொலி செல்வத்தின் உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறினார். அதுமட்டுமல்லாமல் முரசொலி செல்வத்தின் நெருங்கிய நண்பரான துரைமுருகன் அஞ்சலி செலுத்தினார். அவரும் அப்போது கண்ணீர் விட்டு அழுதார். மேலும் கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், பெரியகருப்பன், செந்தில்பாலாஜி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்ட எம்பிக்கள், மயிலை த.வேலு, இ.பரந்தாமன், ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, டாக்டர் எழிலன், ஆர்.டி.சேகர், தாயகம் கவி, எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி உள்ளிட்ட எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர் சிற்றரசு, வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர் சுதீஷ், மதிமுக முதன்மை செயலாளர் துரைவைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கொமதேக தலைவர் ஈஸ்வரன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், காங்கிரஸ் எம்பி விஜய்வசந்த், பொன்குமார், டாக்டர் பாலாஜி, பேராயர் வின்சென்ட் சின்னதுரை உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் மரியாதை செலுத்தினர். மேலும் தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம், டிஜிபி சங்கர் ஜிவால், போலீஸ் கமிஷன் அருண் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் சத்தியராஜ், பிரசாந்த், சந்திரசேகர், சரத்குமார், நடிகை ராதிகா, கவிஞர் வைரமுத்து, நடிகர் விக்ரம் மனைவி சைலஜா, பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், நடிகர் விஜய் மனைவி சங்கீதா, நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்ட திரைபிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அது மட்டுமல்லாமல் திமுக தொண்டர்கள், பொதுமக்கள் என நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். சென்னை கோபாலபுரத்தில் உள்ள முரசொலி செல்வம் இல்லம் முன்பாக திமுகவினர் குவிந்து வருவதால் தொடர்ந்து பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முரசொலி செல்வம் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சென்னை பத்திரிகையாளர் மன்றம் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இன்று மாலை உடல் தகனம்: மறைந்த முரசொலி செல்வத்தின் உடல் இன்று மாலை 4.30 மணியளவில் சென்னை பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

* பத்திரிகைத் துறை மீது தீராத காதல் கொண்டவர்
முரசொலியின் ஆசிரியராக இருந்ததால் முரசொலி செல்வம் என்றே அழைக்கப்பட்டு வந்தார். பலர் பத்திரிகைத் துறைக்கு வருவதற்கு ஊன்றுகோலாக இருந்துள்ளார். இப்போதும் கூட முரசொலியில் கடைசி பக்கத்தில் இளைஞர்களை எழுத வைத்து அவர்களின் இலக்கியத் திறனை வெளியே கொண்டு வந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் அவர் மறைந்துவிட்டார் என்ற தகவல் திமுகவினருக்கும் அவரால் வாழ்வில் உயர்ந்த பத்திரிகையாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. முரசொலி செல்வம் நேற்று காலை முரசொலியில் தான் எழுத வேண்டிய கட்டுரைக்கான குறிப்புகளை எடுத்தார்.

பின்னர் கொஞ்சம் சோர்வாக இருந்ததால் அவரது நாற்காலியிலேயே கண் அயர்ந்தார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை பெங்களூரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தனது தாய்மாமா கலைஞர் கொடுத்த பொறுப்பிலிருந்து கடைசி வரை விலகாமல் இறுதி மூச்சின் போதும் முரசொலிக்காக கடைசி கட்டுரையை எழுதியது பலருக்கு மனவேதனையை தந்துள்ளது. பத்திரிகைத் துறை மீது அவருக்கான தீராத காதலையும் இது வெளிப்படுத்துகிறது.

The post கலைஞரின் மருமகனும் முரசொலி மாறனின் சகோதரருமான முரசொலி செல்வம் காலமானார் appeared first on Dinakaran.

Read Entire Article