கலெக்டர் உத்தரவு; நாகப்பட்டினம் நகராட்சி கடைகளுக்கு வாடகை செலுத்தாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை

3 months ago 24

நாகப்பட்டினம்,அக்.1: நாகப்பட்டினம் நகர்மன்ற கூட்டம் தலைவர் மாரிமுத்து தலைமையில் நேற்று நடந்தது. துணைத்தலைவர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் லீனாசைமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர்: தமிழ்நாடு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் உழைப்பை கண்டு துணைமுதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்கியுள்ளார். இதை வாழ்த்தி வரவேற்கிறோம்.
திலகர்: நாகப்பட்டினம் நகராட்சிக்கு சொந்தமான கடைகளை ஏலம் எடுத்தவர்கள் சரியாக வாடகை செலுத்தாமல் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர்.

அவர்களே மீண்டும் ஏலம் எடுக்கிறார்கள். அல்லது அவர்கள் பினாமி பெயரில் ஏலம் எடுக்கிறார்கள். அவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கும்.
ஆணையர்: நகராட்சிக்கு சொந்தமான கடைகளை ஏலம் எடுத்து வாடகை செலுத்தாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வாடகையை சரியான நேரத்தில் வசூல் செய்யாத நகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். தலைவர்: ஒவ்வொரு முறையும் கூட்டத்தில் வரி மற்றும் வாடகை பாக்கி குறித்து பேசப்படுகிறது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுப்பது இல்லை. எனவே இந்த முறை சட்டப்படியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்தகாரர்கள் நிலுவை வைத்திருந்தால் அவர்கள் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்.

சுரேஷ்: சுனாமி குடியிருப்பு வீடுகளுக்கு வரி விதிக்க வேண்டும்.
ஆணையர்: வரி விதிப்பு செய்த வீடுகள் வரி செலுத்தாமல் பல லட்சம் பாக்கி வைத்துள்ளனரர். புதிதாக மீண்டும் வரி விதிப்பு செய்தால் நாகப்பட்டினம் நகராட்சிக்கு வரி பாக்கி இன்னும் கூடுதலாக ஆகும்.கவிதா கிருஷ்ணமூர்த்தி: நாகப்பட்டினம் நீலா தெற்கு வீதியில் உள்ள சின்ன ஆஸ்பத்திரி பழைமை மாறாமல் புதுபிக்கப்படவுள்ளது. இந்த இடத்தில் நாகப்பட்டினம் மருந்து கொத்தள தெருவில் இயங்கி வந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை தற்காலிகமாக செயல்பட செய்ய வேண்டும்.

மணிகண்டன்: நாகப்பட்டினம் நகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பொறியியல் பிரிவு செயல்படுகிறது. புதிதாக சாலை போடுவதற்கு முன்பு பாதாள சாக்கடை மேன்ஹோல் எங்கு இருக்கிறது என்பதை பார்த்து சாலை போட வேண்டும். ஆனால் மக்கள் வரிப்பணத்தில் புதிதாக சாலை போட்ட பின்னர் மேன்ஹோலை தேடி கண்ட கண்ட இடங்களில் குழி தோண்டப்பட்டு புதிதாக போடப்பட்ட சாலையை சேதப்படுத்தி விட்டார்கள். தலைவர்: அந்த சாலையை போட்ட ஒப்பந்தகாரர் மீது அபராதம் விதித்து மீண்டும் சாலை போட பொறியியல் பிரிவு நடவடிக்கை எடுக்கவும். இவ்வாறு விவாதம் நடந்தது.

The post கலெக்டர் உத்தரவு; நாகப்பட்டினம் நகராட்சி கடைகளுக்கு வாடகை செலுத்தாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article