முருகப் பெருமானிடம் உபதேசம் பெற்றவர்கள் சிவபெருமான், அகத்தியர் மற்றும் அருணகிரிநாதர் மூவரும் ஆவர். அகத்தியர், முருகப்பெருமான் குடிகொண்டுள்ள தலங்களுக்கெல்லாம் யாத்திரை சென்றார். ஒருமுறை அகத்தியர் இந்த கதித்தமலைக்கு வந்தார். ஆண்டவருக்கு பூஜை, நிவேதனம் செய்ய நீரின்றி தவித்தார். அவர் முருகப் பெருமானை வேண்டிக்கொள்ள, முருகனும் காட்சி தந்து மலையில் தம் வேலை ஊன்றி ஓர் ஊற்றை ஏற்படுத்தினார். உடனே நீர் பெருகிற்று. பெருமகிழ்ச்சியுடன் தம் அனுஷ்டானங்களை முடித்துக் கொண்ட அகத்தியர், தொடர்ந்து சில நாட்கள் இத்தலத்தில் தங்கி முருகவேளை வழிபட்டார். முருகன் தன் கூர்வேல் கொண்டு உருவாக்கிய மலைஊற்று,
இன்றுவரை வற்றாமல் நீர் வழங்கிக் கொண்டிருக்கிறது.
`கதித்த மலைக்கு எதித்த மலை இல்லை’ என்று பலரும் இதன் பெருமை பற்றி கூறுவர். `கதித்த மலை’ என்ற சொல்லுக்கு `கோபித்த’ என்ற பொருள் உண்டு. அம்மையப்பனாகிய பெற்றோரிடம் ஞானப்பழம் பெறமுடியாத முருகன் கோபித்து இங்கு வந்து குடிகொண்டதால், கோபித்த மலை என்றானது. அதுவே கதித்த மலையாக மாறியது.
கோபித்துக்கொண்ட முருகனை, காளை வாகனத்தில் வந்து அம்மையும் அப்பனும் சமாதானப்படுத்த முயன்றார்கள். கதித்த என்பதற்கு எழுதல், நற்கதி அடைதல், மிகுதல், கனமான, உயர்ந்த என்றெல்லாம்கூட பொருள்கள் உண்டு. கதித்தாச்சலத்தில் உறைபவனாதலால் முருகப்பெருமானுக்கு `கதித்தாச்சல மூர்த்தி’ என்று பெயர். மக்களின் பேச்சு வழக்கில் ‘கதித்த மலை’ என்றே வழங்கப்படுகிறது. கதித்த மலையை மயூரகிரி என்றும் அழைப்பர். கதித்த மலையே மயில் வடிவில் உள்ளது. மயிலுக்கு வடமொழியில் `மயூரம்’ என்று பெயர். அதனால் கதித்தமலையை மயூரகிரி சேத்திரம் என்றும் அழைப்பர். மலை மேல் கம்பீரமாக ஐந்து நிலை ராஜகோபுரம் ஓங்கி உயர்ந்து நிற்கிறது.
உயரே, கோயிலுக்கு அழைத்துச் செல்லும் விசாலமான படிக்கட்டுகள். கிழக்கே நர்த்தன கணபதியும், தெற்கே பசுபதி லிங்கமும், வடக்கே சூலமும், சூரிய – சந்திரரும், மேற்கே தண்டபாணியும் சிற்பமாக உள்ளனர். தென் பிராகாரத்தில் தலவிருட்சமாக வில்வம் உள்ளது. அதனடியில் முருகப்பெருமான் அற்புத தரிசனம் தருகிறார். கிழக்கு நோக்கி தென் மூலையில் கன்னிமூலை கணபதி உள்ளார்.
பிராகாரத்தில் கொடிமரம் கடந்து அலங்கார மண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம் என்ற ஆலயக் கட்டுக்கோப்பை கடந்தால், கருவறையில் வெற்றி வேலாயுதப் பெருமான் அருள் கோலம் காட்டி ஆட்கொள்கிறார்.
வேலாயுதசாமிக்கு பின்புறமாக வள்ளி – தெய்வானை இருவரும் தனித் தனி சந்நதிகளில் வீற்றிருக்கிறார்கள். இடும்பன் சந்நதியும் அருகில் உள்ளது. சிவபெருமானும், பார்வதியும் மைந்தனின் கோபம் தணிக்க தன் காளை வாகனத்தில் வந்ததற்கு அடையாளமாக இன்றும் மலையின் வடசரிவில் பாறை ஒன்றில் காளையின் திருவடி பதிந்த தடம் உள்ளது. அப்பகுதியை மக்கள் சூலக்கல் என்று அழைக்கிறார்கள்.
கொங்கு நாட்டின் சிறப்புப் பெற்ற கூனம்பட்டி ஆதீனத்தோடு தொடர்புடையது இக்கோயில்.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து சுமார் 38 கி.மீ., பயணித்தால் கதித்தமலை முருகன் கோயிலை அடைந்துவிடலாம்.
The post கர்மவினை நீக்கும் கதித்தமலை appeared first on Dinakaran.