
புதுடெல்லி,
கர்நாடகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போது முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இறுதியில் சித்தராமையா அரியணையில் அமர்த்தப்பட்டார். அப்போது முதல்-மந்திரி பதவி சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு தலா 2½ ஆண்டுகள் என்று காங்கிரஸ் மேலிடம் ஒப்பந்தம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கூட்டுறவுத்துறை மந்திரி கே.என்.ராஜண்ணா, வருகிற செப்டம்பர் மாதம் கர்நாடக அரசியலில் புரட்சி ஏற்படும் என்று கூறினார். அதாவது முதல்-மந்திரி சித்தராமையா மாற்றப்பட உள்ளதாக அவர் சூசகமாக கூறினார். அவரது இந்த கருத்து கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியது. பா.ஜனதா தலைவர்கள், சித்தராமையா மாற்றப்படுவது உறுதி என்று கூறினர். இதை மந்திரி ராஜண்ணாவின் கருத்து உறுதி செய்வதாக உள்ளது.
இதனால் கர்நாடக அரசியலிலும், காங்கிரஸ் கட்சியிலும் முதல்-மந்திரி பதவி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து காங்கிரஸ் மேலிடம் முதல்-மந்திரி பதவி குறித்து மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் பொதுவெளியில் கருத்துக் கூறக் கூடாது என தடை விதித்தது. த்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரும் சித்தராமையாவும் டெல்லிக்கு படையெடுத்தனர்.
டெல்லியில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரை சித்தராமையா சந்தித்து பேச இருப்பதாக தெரிகிறது.இதற்கிடையே, இன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சித்தராமையாவிடம் முதல் மந்திரி மாற்றப்படுவாரா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சித்தராமையா," முதல் மந்திரி பதவி எதுவும் காலியாக உள்ளதா? நான்தான் கர்நாடகாவின் முதல் மந்திரி. இதைத்தான் டிகே சிவக்குமாரும் கூறியுள்ளார். நானும் அதையே சொல்கிறேன். முதல் மந்திரி பதவி காலியாக இல்லை" என்றார்.