
மைசூரு,
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் குஷால்நகர் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ் (வயது 38). இவருடைய மனைவி மல்லிகே என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில் காணாமல் போனார். இதுபற்றி போலீசுக்கு சென்று அவர் புகார் அளித்து உள்ளார்.
ஆனால், பெரியபாட்னா தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் பெண்ணின் எலும்புக்கூடு ஒன்றை போலீசார் கண்டெடுத்தனர். அது மல்லிகேவுடையது என்றும் சுரேஷ் மனைவியை படுகொலை செய்து விட்டார் என்றும் கோர்ட்டில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இதனால் சுரேஷ் சிறையில் அடைக்கப்பட்டார். ஒன்றரை ஆண்டுகளாக அவர் கைதியாக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 1-ந்தேதி வேறொரு நபருடன் ஓட்டலில் மல்லிகே சாப்பிட்டபடி இருந்துள்ளார். அவரை சுரேஷின் நண்பர் பார்த்து அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். இந்த விவகாரம் செசன்ஸ் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. மல்லிகேவும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவருடைய மரபணு பரிசோதனை அறிக்கை வருவதற்கு முன்பே போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். அந்த அறிக்கையில், ரத்த மாதிரிகள் ஒத்து போகவில்லை என்றே முடிவுகள் இருந்தன. இந்நிலையில், வேறொரு நபருடன் ஓடிப்போய் அவரையே திருமணம் செய்து கொண்டேன் என மல்லிகே கோர்ட்டில் ஒத்து கொண்டார்.
சுரேசுக்கு என்ன ஆனது என்பது தனக்கு எதுவும் தெரியவில்லை என்றும் ஷெட்டிஹள்ளி கிராமத்தில் வசித்து வருகிறேன் என்றும் கூறியுள்ளார். அவரை போலீசார் தேடி கண்டறியும் பணியில் ஈடுபடவில்லை. இதனை கோர்ட்டு தீவிர கவனத்தில் கொண்டது. இதனால், அந்த எலும்புக்கூடு யாருடையது என்றும் பொய்யான குற்றப்பத்திரிகையை ஏன் போலீசார் தாக்கல் செய்தனர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது என சுரேஷின் வழக்கறிஞர் கூறினார்.
இதுபற்றி மனித உரிமைகள் ஆணையத்திற்கு செல்வோம் என அவர் கூறியுள்ளார். சுரேசை குற்றவாளியாக்கி 2 வழக்குகளையும் முடிக்க போலீசார் சதி திட்டம் தீட்டினரா? என்பது பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதனை தீவிர கவனத்தில் கொண்ட கோர்ட்டு, முழு அறிக்கையை வருகிற 17-ந்தேதிக்குள் தாக்கல் செய்யும்படி எஸ்.பி.க்கு உத்தரவிட்டார்.