
பெங்களூரு,
கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது, பா.ஜ.க.வை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்றபோது, சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் ஆகிய இருவரும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வகிப்பார்கள் என யூகங்கள் வெளிவந்தன. சுழற்சி முறையில் பதவி பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.
இதனை அக்கட்சி மறுக்கவோ அல்லது அதனை உறுதி செய்யவோ இல்லை. இந்நிலையில், முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக சிவக்குமாரும் பதவியேற்றனர். இந்நிலையில், கர்நாடகாவில் முதல்-மந்திரியை மாற்றம் செய்வதற்கான சாத்தியம் பற்றி அக்கட்சியின் தலைவர்கள் வெளிப்படையாக ஆலோசித்து வருகின்றனர்.
வருகிற அக்டோபரில் இந்த பதவி மாற்றம் இருக்கும் என்றும் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கூறி வருகின்றனர். இதுபற்றி அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், அது கட்சியின் உயர்மட்ட தலைமையின் கைகளில் உள்ளது. உயர்மட்ட அளவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி ஒருவரும் கூற முடியாது.
இதுபற்றிய முடிவு மேலிடத்திடமே விடப்பட்டு விட்டது. நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் கட்சியின் தலைமையிடமே உள்ளது. ஆனால், தேவையின்றி சிக்கலான விவகாரங்களை ஒருவர் உருவாக்க கூடாது என அவர் கூறினார்.