கரை வேட்டியை திரும்ப கட்டுவதற்காக குலதெய்வ கோயிலில் வழிபாடு நடத்தும் தேனிக்காரரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

4 weeks ago 5

‘‘தீபாவளி வரைக்கும் டிரான்ஸ்பர் செய்யக்கூடாதுன்னு 12 வருடமாக ஒரே இடத்தில் பணிபுரியும் மாநகராட்சி அதிகாரி பிரஷர் கொடுத்துக்கிட்டு இருக்கிறாராமே தெரியுமா..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.‘‘மஞ்சள் மாநகராட்சியில் உயர் அதிகாரி ஒருத்தர் தொடர்ந்து 12 வருஷமாக ஒரே இடத்தில் பணியாற்றி வருகிறாராம்.. உதவி ஆணையராக மஞ்சள் மாநகராட்சிக்கு வந்த விஜயமான அதிகாரி இன்றைக்கு தலைமை பொறுப்பு வரைக்கும் வந்துவிட்டாராம்.. கமிஷன் கொட்டுவதால் மாநகராட்சியை விட்டு வெளியே போவதற்கு மனசே இல்லையாம்..

டிரான்ஸ்பர் ஆர்டர் வராம இருக்க தலைமை இடத்தில் இருக்கிற உயர் அதிகாரி ஒருவரை கைக்குள் போட்டுக்கொள்கிறராம்.. அந்த உயர் அதிகாரியும் விஜயமான அதிகாரியும் ஒன்றாக பணியாற்றியவங்க என்பதோடு நெருங்கிய நண்பர்களாவும் இருக்கிறார்களாம்.. அதனால யாராலும் அசைக்க முடியாத அளவுக்கு மஞ்சள் மாநகராட்சி அலுவலக நாற்காலியை கெட்டியாக பிடித்துக்கொண்டு விடமாட்டேன்னு அடம் பிடிக்கிறாராம்.. கமிஷன் வாங்குவதில் கறாரானவர் என்பதால் இவரை மாத்தியே ஆகணும்னு ஒரு குரூப் முயற்சி செய்யறாங்களாம்.. சமீபத்தில் இவரை மாத்தியே ஆகணும்னு முடிவு செஞ்சு ஆர்டர் கூட தயாராச்சாம்..

ஆனா இதை மோப்பம் பிடித்த விஜயமானவர் வழக்கம்போல தனது செல்வாக்கை பயன்படுத்தி குறைந்தபட்சம் தீபாவளி வரைக்கும் டிரான்ஸ்பர் செய்யக்கூடாதுன்னு பிரஷர் கொடுத்துகிட்டு இருக்கிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘செயலாளர் மாறினாலும் கோஷ்டிகள் மாறவில்லை என இலைக்கட்சி ஆண்டு விழாவுக்கு வந்த ரத்தத்தின் ரத்தங்கள் புலம்பும் சத்தம் கேட்குதாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடைகோடி மாவட்ட தலைநகரில் இலைகட்சி ஆண்டு விழா புதிய பொறுப்பாளர் தலைமையில் நடந்திருக்கு..

விழாவில் முன்னாள்களில் ஒருவரான பச்சையானவர் பங்கேற்காமல் தனது பங்கிற்கு வீட்டருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டாராம்.. மாவட்ட செயலாளர் பதவி தனக்கு வரும்னு எதிபார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியதால்தான் இந்த தனித்துவ கொண்டாட்டமாம்.. இது ஒருபுறம் இருக்க, பொறுப்பை பறிகொடுத்த சுந்தரமானவரோ தனது பிறந்தநாளையொட்டி சபரிமலை சென்றுவிட்டாராம்.. அவரது ஆதரவாளர்கள் சிலரும் கூடவே போய்விட்டார்களாம்..

மற்ற ஆதரவாளர்கள் விழா நடந்த பகுதிக்கு வரவே இல்லையாம்.. இலைகட்சியில் செயலாளர் மாறினாலும் கோஷ்டிகள்தான் மாறவில்லை. இது எங்கே போய்தான் முடியுமோ என ஆண்டுவிழாவிற்கு வந்த ரத்தத்தின் ரத்தங்கள் புலம்பிக்கிட்டே சென்றார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கரை வேட்டி கட்டியே தீரவேண்டும் என்கிற சிறப்பு வேண்டுதலை தான் குடும்பிடும் தெய்வம் கைவிடாதுன்னு உறுதியா நம்புகிறாராமே தேனிக்காரர்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சொத்து குவிப்பு வழக்கில் மம்மிக்கு சிறை தண்டனை கிடைத்தவுடன் முதல்வர் பதவியை தேனிக்காரரிடம் ஒப்படைத்துவிட்டு ஜெயிலுக்கு சென்றாராம்..

திரும்பி வந்தவுடன் தலைவணங்கி பொறுப்பை மம்மியிடம் ஒப்படைத்த காரணத்தால் வானம்வரை புகழ்ந்தாராம் மம்மி. இவ்வளவு உயரத்தில் இருந்த தேனிக்காரருக்கு கட்சியின் கரைவேட்டி கட்டமுடியாத நிலை ஏற்பட்டு போச்சாம்.. எப்படியாவது கட்சியில் இணைந்து கரை வேட்டியை கட்டியே தீருவேன்னு அவர் வேண்டாத கோயில் இல்லையாம்.. குலதெய்வ கோயிலில் வழிபாடு நடத்துகிறாராம். இதற்காக திருப்பதி சென்று சிறப்பு வேண்டுதலை வச்சிருக்காராம்.. அதே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தலின் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத 6 மாஜிக்கள் இலைக்கட்சி தலைவரை போய் சந்திச்சு பேசுனாங்க..

என்றாலும் அவர்களின் பேச்சு எடுபடல. இதுவரை இணைப்பு சந்திப்பை மறுக்காத நிலையில், திடீரென இலைக்கட்சி தலைவர் மறுத்துட்டாராம்.. அவர்கள் என்னுடனேயே இருக்கிறார்கள் எனவும் சொல்லியிருக்காரு. இதனை பக்கத்தில் இருந்து கேட்ட கொங்குகாரர் நமட்டு சிரிப்பு சிரிச்சாராம்.. மலராத கட்சியுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்பதுதான் இவரது தீராத ஆசையாம்.. ஆனால் அதுமுடியாமல் போனதால் ரொம்பவே வருத்தத்துல இருந்தாராம்..

இவரது ஏற்பாட்டின்பேரில்தான் இலைக்கட்சி தலைவரை சந்திச்சு பேசுனாங்களாம்.. ஆனால் சந்தித்த யாரும் வாய் திறக்காத நிலையில், இலைக்கட்சி தலைவர் இல்லை என்று சொன்னது வியப்பா இருக்காம்.. இதனால நடந்ததை வெளியே சொல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் சந்திப்பு மாஜிக்கள் தவிப்புக்கு ஆளாகியிருக்காங்களாம்… அதே நேரத்தில் கட்சியில் சேர்க்கவே முடியாதுனு இலைக்கட்சி தலைவர் திட்டவட்டமாக கூறியதால் அதிர்ச்சிக்கு ஆளான தேனிக்காரர், தான் கும்பிடும் தெய்வம் தன்னை கைவிடாதுன்னு உறுதியா நம்புறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலை கட்சியின் ஆண்டு விழா கொண்டாட்டத்தை மாஜி அமைச்சர் ஒருவரும் புறக்கணித்ததுதான் டெல்டா, கடலோர மாவட்டங்களில் பரவலாக பேசப்படுகிறதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியின் ஆண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முக்கிய நிர்வாகிகள் தலைநகரில் குவிந்தாங்களாம்.. ஆனால், கடலோர மாவட்டத்தை சேர்ந்த மாஜி அமைச்சர் மணியானவர் உள்பட டெல்டா மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலரும் தலைநகர் செல்லவில்லையாம்…

தற்போது இந்த விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்து இருக்கு.. முக்கிய நிர்வாகிகள் தலைநகருக்கு செல்லாமல் இருந்தது ஏன் என பல்வேறு சந்தேகங்கள் கட்சிக்குள்ளே பூகம்பமா கிளம்பியுள்ளதாம்… இந்த விவகாரம் தொடர்பாக சேலத்துக்காரர் கவனத்துக்கு கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள் உடனடியாக கொண்டு சென்றாங்களாம்.. இதுகுறித்து ரகசியமாக விசாரணை நடத்த அவரது டீமுக்கு சேலத்துக்காரர் உத்தரவிட முடிவு செய்துள்ளாராம்… இந்த டாப்பிக் தான் கடலோர, டெல்டா மாவட்டங்களில் தொண்டர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறதாம்…’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post கரை வேட்டியை திரும்ப கட்டுவதற்காக குலதெய்வ கோயிலில் வழிபாடு நடத்தும் தேனிக்காரரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article