கரும்புச் சக்கையில் பயோ பொருட்கள் தயாரித்து அசத்தும் இளைஞர்!

3 months ago 20

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், சூரியஒளி, கனிமங்கள், தாவரங்கள், பல்லுயிரிகள் என இயற்கை நமக்களித்த வளங்கள் ஏராளம். இயற்கையின் கொடையால் நமது பூமி மனிதர்களும், பல்வேறு வகையான உயிரினங்களும் வாழத் தகுந்த இடமாக உள்ளது. இயற்கை வளங்களோடு ஒன்றிணைந்து பூமியானது மனித சமுதாயத்தை இயக்கியது.

ஆனால், இன்றைய நவீனகால வாழ்க்கை முறையில் தொழில்நுட்ப வளர்ச்சியை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்பட்டதால் இயற்கை வளங்களை பாதுகாக்கத் தவறிவிட்டோம். பசுமையான காடுகளை அழித்து கான்கிரீட் காடுகளாக்கி விட்டோம்.மேலும், இயற்கைக்கு மாறாக நாம் செயல்பட்டதன் விளைவாகப் புவி வெப்பமடைதல், சுற்றுச்சூழல் மாசு, நிலநடுக்கம், போன்ற இயற்கைப் பேரிடர்களை எதிர்கொண்டு் வருகிறோம்.

குறிப்பாக, இயற்கை வளத்தின் ஆதாரமாக விளங்கும் மண், நீர் ஆகியவற்றை பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தி பாழ்படுத்திவிட்டோம். மக்கும் தன்மையற்று பல ஆண்டுகளாக மண்டிக்கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மனித சமுதாயம் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் கேடு விளைவித்துவருகிறது. இதனைத் தடுக்கும் விதமாகத் தமிழ்நாடு அரசு சார்பில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகளில் இருந்து தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து அகற்றப்படுகிறது.

மக்கும் தன்மைகொண்ட குப்பைகள் உரமாக மாற்றப்பட்டு விவசாயப் பணிகளுக்கும், மாடித்தோட்டம் அமைப்போருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பொருட்களைக்கொண்டு சாலைகள் அமைக்கவும், சிமெண்ட் உற்பத்திக்காகத் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதே சமயம், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் விதமாக பயோ பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்ய பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிட இளைஞர் சமுதாயத்தைத் தமிழ்நாடு அரசு ஊக்குவித்து வருகிறது.

அதன்படி, வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை சுபம் நகர் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த இயற்பியல் இயற்கை அறிவியல் முதுநிலை பட்டதாரி இளைஞரான சாய்குமார் என்பவர் பயோ பிளாஸ்டிக் முறையில் முகக்கவசம், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை கண்டுபிடித்து காண்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். இயற்கை வளத்தை பாதுகாக்கும் வகையிலான தனது கண்டுபிடிப்புகள் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

‘‘நான் வேலூர் விருப்பாட்சிபுரத்தில் உள்ள தேசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2018ம் ஆண்டு 12ம் வகுப்பு படித்தேன். பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்துவதோடு அதுதொடர்பான செய்முறைப் பயிற்சியிலும் ஈடுபட வேண்டும் என்று ஊக்குவித்தனர். தமிழ் ஆசிரியர் நாகராஜ் அறிவியல் கண்டுபிடிப்பின் அவசியம் குறித்து எடுத்துரைத்து உற்சாகப்படுத்தியதன் விளைவாகப் பள்ளியில் நடைபெறும் அறிவியல் கண்காட்சிகளில் பங்கேற்றேன். பள்ளி நண்பர்களான அஜய், கார்த்திகேயன், உதயா ஆகியோருடன் இணைந்து புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டேன். தொடர்ந்து, ப்ரோட்டோ வகை தரவு பரிமாற்றம் செயற்கைக்கோள், விவசாயத்திற்கான உயிரி எரிவாயு ஆலை, தாவரங்களுக்கான கரிம உரங்கள் உற்பத்தி செய்வது, பயிர்கள் மற்றும் தாவரங்களைத் தாக்கும் பூச்சிக்கொல்லி ஆகியவற்றை கண்டுபிடித்து காட்சிப்படுத்தினேன்.

இதனைக் கண்ட அறிவியலாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் வெகுவாகப் பாராட்டினர். எனது பெற்றோர்் அளித்த ஊக்கம், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் எனது முயற்சிகளுக்கு உறுதுணையாகவும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியுடன் இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும், என்ற ஆர்வத்தைத் தூண்டியது. பள்ளிப் படிப்பு முடிந்ததும் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இயற்கை இயற்பியல் அறிவியல் துறையில் சேர்ந்தேன். அங்கு மரைன் துறை பேராசிரியர் முனிசாமி எனது அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு உறுதுணையாக இருந்தார்’’ என்று கூறும் சாய்ராம் தனது கண்டுபிடிப்பான ப்ரோட்டோ வகை தரவுப் பரிமாற்றம் செயற்கைக்கோள் அடுக்கம்பாறையில் உள்ள வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தவர், தனது மற்றொரு கண்டுபிடிப்புகளான மக்கும் தன்மை கொண்ட பயோ பிளாஸ்டிக் முகக்கவசம், தண்ணீர் பாட்டில் குறித்தும் ஆர்வத்துடன் விவரிக்கத் தொடங்கினார்.

‘‘எனது அறிவியல் கண்டுபிடிப்பின் மீதான ஆர்வத்தைக் கண்ட பொதுமக்கள் பலரும், உணவுப் பொருட்கள் பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக புதிய கண்டுபிடிப்பை உருவாக்க வேண்டும், என்றனர். இந்தச் சூழலில்தான் 2019ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவல் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், என்று அரசு அறிவுறுத்தியது. முகக்கவசத்தின் தேவை அதிகரித்ததால் அதன் விலை பன்மடங்கு உயர்ந்து. 3 லேயர் சாதாரண முகக்கவசம் ₹20 வரை விற்பனையானது. துணியால் தயாரிக்கப்பட்ட முகக்கவசம் ₹50க்கு விற்கப்பட்டது.

அதேபோல் மருத்துவச் சான்று பெற்ற என்95 மாஸ்க் விலை கடுமையாக உயர்ந்தது. சாதாரண ஏழை எளிய மக்கள் அடிக்கடி மாஸ்க் வாங்க முடியாது என்பதால் அதற்கான மாற்றாக முகக்கவசம் தயாரிக்க முடிவு செய்தேன். அதேநேரத்தில் பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள் பொதுஇடங்களில் மக்கும் தன்மையற்ற நிலையில் சிதறிக்கிடப்பதைக் கண்டேன். இதையடுத்து, மக்கும் தன்மைகொண்ட பயோ பிளாஸ்டிக் முகக்கவசத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். கரும்புச் சக்கையில் இருந்து பாலி லேக்டிக் ஆசிட்டை பிரித்தெடுத்து பல்வேறு கட்ட ஆய்வுப்பணிகளின் முடிவில் இயற்கைக்குக் கேடு விளைவிக்காத மக்கும் தன்மை கொண்ட முகக்கவசங்களைக் கண்டுபிடித்தேன். அதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்று பயன்படுத்தியதோடு, வெகுவாகப் பாராட்டினார்கள்’’ என்று கூறும் சாய்குமார் தனது மற்றொரு கண்டுபிடிப்பான தண்ணீர் பாட்டில் தயாரிப்பு குறித்தும் விவரித்தார்.

‘‘அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களுக்கு மாற்றாக பயோ பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டேன். கரும்புச் சக்கையைப் போன்று, நெல் உமி, வேர்க்கடலையில் மேல்புறத்தோள் ஆகியவற்றில் இருந்து பாலி லாக்டிக் ஆசிட் பிரித்தெடுத்து இழைகளாக உருவாக்கி, கணினி உதவியுடன் 3டி வடிவில் வாட்டர் பாட்டிலை உருவாக்கி சிஎன்சி மெஷின் மூலமாக பயோ பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை உருவாக்கினேன். நான் தயாரித்த பொருட்களை பீனிக்ஸ் இன்டஸ்ட்ரீஸ் என்ற இணையதளத்தின் மூலமாக விற்பனை செய்துவருகிறேன்.

இந்த மாஸ்க், வாட்டர் கேன் ஆகியவை ஓராண்டு வரை பயன்படுத்தலாம். நாளடைவில் அதுவாகவே உடைந்து இயற்கைக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லாமல் மண்ணோடு மண்ணாக மக்கி உரமாகிவிடும். இயற்கை முறையில் தயாரித்த எனது பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்று பயன்படுத்தி வருவது மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றவர் மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் ₹10 ஆயிரம் மதிப்பில் சூரிய மின்சக்தி மூலமாக இயங்கும் மூன்று சக்கர வாகனத்தையும் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

மேலும், அண்ணா பல்கலையில் தனது ஸ்டார்ட் அப் கம்பெனி குறித்த ஆய்வறிக்கையை சமர்பித்துள்ளாதாக கூறியவர் தனது ‘‘மேக் இன் சிம்பிள்’’ திட்டத்தின் மூலமாக ப்ரோட்டோடைப் எலக்ட்ரிக் பைக்(EV) தயாரிப்பு குறித்தும் கூறினார்.

‘‘சுற்றுச்சூழல் மாசு, எரிபொருள் விலை உயர்வு போன்ற காரணங்களால் தற்போது வாகனச் சந்தையில் எலக்ட்ரிக் பைக்குகள் விற்பனை அதிகரித்து விலையும் ₹90 ஆயிரம் முதல் ₹2 லட்சம் வரை உயர்ந்துள்ளது. இதற்கான மாற்று நடவடிக்கையாக எங்கள் ஸ்டார்ட் அப் தொழிற்ச்சாலையின் மூலம் ‘‘மேக் இன் சிம்பிள்’’ என்ற கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் புதிய வடிவில் ₹60 ஆயிரம் மதிப்பில் எலக்ட்ரிக் பைக் தயாரிக்க முடிவு செய்துள்ளேன். அதற்கான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

அதேபோல், முப்பரிமாண தொழில்நுட்பத்தின் மூலமாக இயற்கைவளம் பாதுகாக்கும் வகையில் அனைத்து தொழில்நுட்பக் கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மாதிரி கிராமங்களையும் உருவாக்குவதற்கான ஆய்வுப் பணியிலும் ஈடுபட்டுள்ளேன். மாணவர் சமுதாயம் கல்வி கற்பதோடு நின்றுவிடாமல் மக்கள் பயன்பெறும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி அடுத்து வரும் இளம் தலைமுறையினருக்கு முன்னோடியாக திகழ்ந்து வளமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். படித்தோம், வேலைக்கு சென்றோம், என்றில்லாமல் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் பயனுள்ள புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்’’ என்று கூறும் சாய்ராம் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்கிறார்.

– இர.மு. அருண்பிரசாத்

The post கரும்புச் சக்கையில் பயோ பொருட்கள் தயாரித்து அசத்தும் இளைஞர்! appeared first on Dinakaran.

Read Entire Article