
கருப்பு திராட்சையில் இருக்கும் ஆன்தோசயனின் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் காரணமாக அது கருமை நிறத்தில் உள்ளது. 100 கிராம் கருப்பு திராட்சையில் 70 கலோரிகள், 18 கிராம் கார்போஹைட்ரேட், 15 கிராம் சர்க்கரை, 1 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதில் மிக குறைந்த அளவே கொழுப்பும், புரதமும் இருக்கிறது. கருப்பு திராட்சையில் அதிகமான அளவு வைட்டமின் சி, வைட்டமின் ஏ,கே,பி காம்ப்ளக்ஸ் மற்றும் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், மாங்கனீஸ், காப்பர், பொட்டாசியம் போன்ற தாதுக்களும், பாலிபெனால்ஸ், பிளாவனாய்ட்ஸ், ஆன்தோசயனின், கேட்டிசின், ரெஸ்வெராட்ரால் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளும் அதிகமாக இருக்கின்றன.
கருப்பு திராட்சையின் கிளைசெமிக் இன்டெக்ஸ் 43. இதன் கிளைசெமிக் லோடு 11. இந்த இரண்டு குறியீடும் குறைவு என்பதால் சர்க்கரை நோயாளிகள் கருப்பு திராட்சையை உட்கொள்ளலாம். எனினும் இதில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் மிதமான அளவு மட்டுமே சாப்பிடுவது நல்லது.
கருப்பு திராட்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்டான ரெஸ்வரேட்ரால், சர்டூயின் என்ற புரதத்தை தூண்டி ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுவதாக ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆன்தோசயனின் ஆன்டியாக்ஸிடன்ட் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்தும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் இதிலிருக்கும் பொட்டாசியம், ரத்த நாளங்களை தளர்வடையச் செய்து ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி சாப்பிட்டவுடன் உடனே ஏற்படும் குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் வராமல் தடுக்கிறது. மேலும் இது மலச்சிக்கல் பிரச்சினையையும் போக்குகிறது. கருப்பு திராட்சைகளில் அடங்கியிருக்கும் ஆன்டியாக்ஸிடன்ட்ஸ் புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.
இதிலுள்ள ஆன்டியாக்ஸிடன்ட்ஸ் ஆக்ஸிஜனேட்டட் அழுத்தத்தை குறைத்து உடலில் உள்ள செல்களில் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் பாதிப்பை தடுக்க உதவி செய்கிறது. கருப்பு திராட்சையை புரதம், நார்ச்சத்து நிறைந்த பாதாம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடும் போது இதில் உள்ள சர்க்கரையால் ஏற்படும் குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் வராமல் தாமதப்படுத்தப்படுகிறது. ஒரு நாளைக்கு 10 - 15 கருப்பு திராட்சைகளை சர்க்கரை நோயாளிகள் உட்கொள்ளலாம்.
