மதுரை: “தமிழகத்தில் திமுக அமைச்சர்கள் இந்து மதத்தை இழிவுபடுத்துவதை வழக்கமாகவும், ஒரு தொழிலாகவும் வைத்துள்ளனர். இந்த அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யாவிட்டால் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் திமுகவுக்கு மிப் பெரிய பாடம் புகட்டுவார்கள். கருணாநிதி சமாதியில் விளம்பரம் தேட கோயில் கோபுரம் தான் கிடைத்ததா?” என இந்து மக்கள் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிரான மனநிலை கொண்டவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவரது சமாதியை இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையை ஒட்டி அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு ஆண்டாள் கோயில் கோபுரத்தை வரைந்து அலங்கரித்துள்ளார். சமாதியில் கோயில் கோபுரம் படம் வரையப்பட்டது திருக்கோயில்களின் கோபுரங்களின் புனிதத்தை கெடுக்கும் வகையில் அமைந்துள்ளது.