கருங்கல் பெத்லகேம் நர்சிங் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 4 மாணவிகள் திடீர் மயக்கம்

12 hours ago 1

*நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் – பரபரப்பு

கருங்கல் : கருங்கல் அருகே நடுத்தேரி பகுதியில் பெத்லகேம் நர்சிங் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு 120 மாணவிகள் நர்சிங் படித்து வருகின்றனர். இந்த மாணவிகள் கல்லூரியில் உள்ள ஹாஸ்டலில் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த மாணவிகள் வார்டன்களால் டார்ச்சர், போதிய அடிப்படை வசதிகள் இல்லாமை, அதிகப்படியான அபராதம், தரமில்லாத உணவுகள் போன்றவற்றால் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. ஏற்கனவே அங்கு வேலை பார்த்து வந்த ஹாஸ்டல் வார்டனை மாற்றி புதிய வார்டனை நியமித்துள்ளனர்.

இது சம்மந்தமாக கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 4 மாணவிகள் மயங்கி விழுந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனை அடுத்து நர்சிங் கல்லூரி மாணவிகள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பெரும்பாலான மாணவிகள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு போராட்டம் நடப்பதை அறிந்து கருங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஆனால் கல்லூரியில் எந்த சம்பவமும் இல்லை எனக் கூறி போலீசாரை உள்ளே விடவில்லை என கூறப்படுகிறது. கடும் பிரச்சினைக்குப் பிறகே போலீசாரை உள்ளே அனுமதித்துள்ளனர். இதனை அடுத்து குளச்சல் ஏஎஸ்பி பிரவீன் கெளதம், கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் சம்பவ இடத்திற்கு வந்து கல்லூரி மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மாணவிகளின் குறைகளை கேட்ட தாசில்தார் மற்றும் ஏஎஸ்பி மாணவிகளிடம் உங்களின் குறைகள் அனைத்தும் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் எனவும், புதிய வார்டனை உடனடியாக மாற்றி பழைய வார்டன் நியமிக்கப்படுவார் எனவும், மற்ற குறைகளை வரும் வெள்ளிக்கிழமை தாசில்தார் மற்றும் ஏஎஸ்பி தலைமையில் கல்லூரி நிர்வாகம், மாணவிகள் மற்றும் மாணவிகளின் பெற்றோர் அனைவரையும் வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வில்லை

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பில் கூறும்போது : ஹாஸ்டலில் கொடுக்கப்படும் உணவுகள் வாயில் வைக்க முடியாமல் வாந்தி வரும் நிலையில் உள்ளது. ஒரு நிமிடம் தாமதமாக சென்றாலும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கின்றனர். இரவு முழுவதும் கண் விழித்து அசைமென்ட் எழுதிக் கொண்டு சென்றாலும் கிழித்து எறிந்து விட்டு வேறு எழுதிக் ‍கொண்டு வர கூறுகின்றனர். ஒரு அவசர தேவைக்கு கூட மொபைல் போன் பயன்படுத்த முடியாது.

வார்டனின் ஒரே போனில் தான் பேச வேண்டும். மயங்கி விழுந்த மாணவிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூட எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. சில மாணவிகளின் பெற்றோர் வந்த பிறகு அவர்கள் காரில் தான் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றோம் எனவும் பல்வேறு டார்ச்சர்களை அனுபவித்து வருவதாகவும் மாணவிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

உணவு மாதிரியை சோதிக்க நடவடிக்கை

கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து 108 ஆம்புலன்ஸ் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மாணவிகள் சாப்பிட்ட உணவால் தான் வாந்தி எடுத்து மயங்கினார்கள் என மாணவிகள் அதிகாரிகளிடம் குற்றம் சாட்டியதால் திங்கள் கிழமை காலையில் மாணவிகள் சாப்பிட்ட உணவை சாம்பிள் எடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வகத்திற்கு எடுத்து சென்று சோதனைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

The post கருங்கல் பெத்லகேம் நர்சிங் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 4 மாணவிகள் திடீர் மயக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article