சென்னை: மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகங்களில் நவம்பர் புரட்சி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. நவம்பர் புரட்சி எனப்படும் ரஷ்யபுரட்சி தின விழா சென்னை தி.நகரில்உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செங்கொடியை ஏற்றினார்.
அப்போது செய்தியாளர்களிடம் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:பாஜக அரசு கடைபிடிக்கும் பொருளாதார கொள்கை மக்களை கடுமையாக பாதிக்கிறது. விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. மக்கள் ஒற்றுமையை பிளவுபடுத்தும் வகுப்புவாத கொள்கை, வாழ்க்கை தரத்தை பாதிக்கும் பொருளாதார கொள்கை ஆகியவற்றை எதிர்த்தும், தேச ஒற்றுமை, மதச்சார்பின்மை, கூட்டாட்சி, சுயசார்பு கொள்கைக்காக தொடர்ந்து போராடவும் சபதம் ஏற்கும் நாளாக புரட்சி தினத்தை மார்க்சிஸ்ட் கட்சி கொண்டாடுகிறது என்று கூறினார்.