டாக்கா,
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுள்ளார். தோனி தலைமையில் 2007 (டி20), 2011 (ஒருநாள்) உலகக்கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் ஐபிஎல் தொடரில் கேப்டனாக 2 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். அத்துடன் கொல்கத்தா அணி 10 வருடங்கள் கழித்து ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு கவுதம் கம்பீர் ஆலோசகராக முக்கிய பங்காற்றினார். அதனால் ராகுல் டிராவிட்டுக்குப் பின் அவரை பிசிசிஐ புதிய பயிற்சியாளராக தேர்ந்தெடுத்துள்ளது.
இந்நிலையில் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று வருவதால் கம்பீர் தலைமையில் இந்திய அணி சுமூகமாக இருப்பதாக முன்னாள் வங்காளதேச வீரர் தமீம் இக்பால் கூறியுள்ளார். ஆனால் அடுத்தடுத்து 2 தொடர்களில் தோல்வியை சந்திக்கும்போது தான் கம்பீரின் உண்மையான குணம் இந்திய ரசிகர்களுக்கு தெரிய வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ராகுல் டிராவிட் மற்றும் ரவி சாஸ்திரி தலைமையில் இந்தியா நிறைய வெற்றிகளை பெற்றுள்ளது. அது தற்போது அப்படியே தொடர்கிறது. எனவே வெற்றி நடையில் நீங்கள் மாற்றங்களை செய்ய மாட்டீர்கள். அதே சமயம் புதியவராக பொறுப்பேற்றுள்ள நீங்கள் உங்களுடைய சொந்த வழியை கொண்டு வருவது முக்கியம். தற்சமயத்தில் இந்திய அணியிலிருந்து வீரர்கள் ரிலாக்ஸாக இருப்பதாகவும் டெஸ்ட் போட்டிகளை வெல்லும் எண்ணத்துடன் இருப்பதாகவும் கதைகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.
அப்படி வெற்றி நடை போடும்போது ஒரு மனிதரின் உண்மையான குணம் வெளிப்படாது. ஒரு தொடரில் நீங்கள் தோற்று மற்றுமொரு தொடரில் தொடர்ச்சியாக தோற்கும்போது தான் உண்மையான கேரக்டர் வெளியே வரும். இந்திய அணியை கம்பீர் வெற்றிகரமாக வழி நடத்தும் திறனை கொண்டிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் இப்போதே அவரை வெற்றிகரமானவர் என்று சொல்ல முடியாது. இந்தியா ஒரு மோசமான தோல்வியை சந்திக்கட்டும். பின்னர் என்ன வருகிறது என்பதை பார்ப்போம்" என்று கூறினார்.