வாஷிங்டன்:
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆகியோருக்கிடையே நேரடி போட்டி நிலவுகிறது.
ஜனாதிபதி தேர்தலைப் பொருத்தவரை பெரும்பாலான மாநிலங்கள் இந்த இரு பிரதான கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சிக்கு ஆதரவான நிலையிலேயே உள்ளன. சில மாநிலங்களில் மட்டுமே இழுபறி நிலவும். இந்த மாநிலங்களில் வேட்பாளர்கள் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். இந்த மாநிலங்களே பெரும்பாலும் வெற்றியைத் தீர்மானிப்பதால் 'போர்க்கள' மாநிலங்கள் என அழைக்கப்படுகின்றன.
இந்த அவ்வகையில் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலைத் தீர்மானிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் 7 மாநிலங்களில் பென்சில்வேனியா மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. நெவாடாவிலும் கடும் போட்டி இருக்கும். இந்த மாநிலங்களில் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வேட்பாளர்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அவ்வகையில், பென்சில்வேனியாவில் இன்று பிரசாரம் செய்த டிரம்ப், அமெரிக்காவில் குற்றங்கள் பெருகி வருவதாகவும், காவல்துறை கடுமையான அடக்குமுறையை கையில் எடுத்து குற்றச்செயல்களை ஒடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வின்கான்சின் மாநிலத்தில் நேற்று பிரசாரம் செய்தபோது, புலம்பெயர்ந்தோரின் வன்முறை மற்றும் பிற குற்றவாளிகளின் படையெடுப்பால் அமெரிக்கா சிதைந்து வருகிறது என, இனரீதியான குற்றச்சாட்டுகளை மீண்டும் வெளிப்படுத்தினார். பல்வேறு விஷயங்களில் ஜோ பைடன் அரசு தோல்வியடைந்துவிட்டது என்றும், எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறியவர்களால் நாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க கமலா ஹாரிசால் எதையும் செய்ய முடியாது என்றும் கூறினார்.
பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் திருடர்கள் பட்டப்பகலில் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடப்பதாக கூறிய அவர், 'இந்த விஷயத்தில் காவல்துறை முரட்டுத்தனமாக செயல்படவேண்டும். குற்றவாளிகளுக்கு பாடம் புகட்டவேண்டும். ஆனால், காவல்துறையினர் தங்கள் பணியை செய்ய அனுமதிப்பதில்லை. ஏனென்றால், தாராளவாதிகள் அவர்களை அனுமதிக்க மாட்டார்கள்' என்றார்.
மேலும் ஜோ பைடனைப் போன்று கமலா ஹாரிசும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் டிரம்ப் விமர்சனம் செய்தார்.
இதற்கிடையே லாஸ் வேகாசில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய கமலா ஹாரிஸ், எல்லைப் பாதுகாப்பில் உள்ள கடுமையான பிரச்சினைகள் குறித்து குறிப்பிட்டார். மேலும், நாட்டின் பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் குடியேற்ற சீர்திருத்தத்தின் அவசியம் என தனது வழக்கமான பாணியில் உரையாற்றினார்.
மேலும், 'டொனால்ட் டிரம்ப் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாட்டார் என்பது நமக்கு தெரியும். அவர் அதிபராக இருந்தபோது, நமது குடியேற்ற அமைப்பை சரிசெய்ய எதுவும் செய்யவில்லை' என்றும் கமலா ஹாரிஸ் பதிலடி கொடுத்தார்.