கன்னியாகுமரியில் வரும் 30ம் தேதி முதல் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா 3 நாள் கோலாகல கொண்டாட்டம்: கண்ணாடி இழை பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்கிறார்

3 weeks ago 4

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை 25ம் ஆண்டு வெள்ளிவிழா வரும் 30ம் தேதி தொடங்கி ஜனவரி 1ம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் வகையில் ரூ.37 கோடியில் கட்டப்பட்ட கண்ணாடி இழை பாலத்தை திறந்து வைத்து, திருக்குறள் நெறி பரப்பும் 25 தகைமையாளர்களுக்கு சிறப்பு பரிசுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். இரவு 7 மணிக்கு சிறப்பு பட்டிமன்றம் ‘திருக்குறளால் அதிக நன்மை தனி மனிதருக்கே, சமுதாயத்திற்கே’ என்ற தலைப்பில் நடைபெறுகிறது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளாக 31ம் தேதி (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலரை வெளியிட்டும், திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். பியானோ இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் என்பவரது திருக்குறள் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 11.30 மணிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.நிறைவு நாள் நிகழ்ச்சி ஜனவரி 1ம் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

* ‘வெளிநாட்டு அமைச்சர்களுக்கு அழைப்பு’
திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவுக்கான பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவில் வெளிநாட்டு அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். விழாவை முன்னிட்டு அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட கலெக்டர் அழகுமீனா ஆகியோர் திரிவேணி சங்கமம் பகுதியில் விழிப்புணர்வு கலை பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மேலும் வண்ண பலூன்களையும் பறக்கவிட்டனர்.

The post கன்னியாகுமரியில் வரும் 30ம் தேதி முதல் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா 3 நாள் கோலாகல கொண்டாட்டம்: கண்ணாடி இழை பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்கிறார் appeared first on Dinakaran.

Read Entire Article