
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2013-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து 11 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி 12-வது ஆண்டு வருஷாபிஷேக விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடக்கிறது. பின்னர் கணபதி ஹோமம், நவகலச பூஜை தொடர்ந்து காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், தயிர், இளநீர், களபம், சந்தனம், குங்குமம், மஞ்சள்பொடி, மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன் உள்பட 16 வகையான அபிஷேகம், தொடா்ந்து கலசாபிஷேகம் நடக்கிறது. இந்த கலசாபிஷேக பூஜைகளை மணலிக்கரை மாத்தூர் மடம் தந்திரி சஜித் சங்கரநாராயணரூ நடத்துகிறார்.
இதையொட்டி வைரகிரீடம் மற்றும் வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் உச்சி கால பூஜை, உச்சிகால தீபாராதனை, மாலையில் சாயரட்சை தீபாராதனை, இரவு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேள தாளம் முழங்க 3 முறை வலம் வர செய்யும் நிகழ்ச்சி, வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாள பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.