கன்னியாகுமரி: சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., உதவியாளர் கைது

22 hours ago 1

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுக்காவில் உட்பட்ட தலக்குளம் கிராம நிர்வாக அலுவலகத்தில் வி.ஏ.ஓ.வாக (கிராம நிர்வாக அலுவலர்) பணிபுரிந்து வருபவர் அமல ராணி. கிராம உதவியாளர் பேபி.

இதனிடையே, நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் ஒப்பந்த பணிகளை எடுத்து செய்து வருகிறார். ஒப்பந்த பணிகளை செய்ய சொத்து மதிப்பு சான்று வேண்டி தனது 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணத்தை காண்பித்து விண்ணப்பித்து உள்ளார்.

சொத்து மதிப்பு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் போது வி.ஏ.ஓ. பரிந்துரை செய்து அதன் பின்னர் ஆர்.ஐ பரிந்துரை செய்த பின்னர் தாசில்தார் அலுவலகம் மூலமாக சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம்.

அதன்படி, சொத்து மதிப்பு சான்று பெற தலக்குளம் வி.ஏ.ஓ. அலுவலகத்தில் ஆறுமுகம் விண்ணப்பித்துள்ளார். ஆனால், சான்றிதழ் வழங்க ரூ. 3 ஆயிரம் லஞ்சம் தரவேண்டுமென வி.ஏ.ஓ. அமல ராணி கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆறுமுகம் இதுகுறித்து குமரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தல்படி, இன்று காலை 11.30 மணிக்கு கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்ற ஆறுமுகம் ரசாயனம் தடவிய ரூ. 3 ஆயிரம் பணத்தை வி.ஏ.ஓ. அமல ராணியிடம் கொடுத்துள்ளார். பணத்தை வி.ஏ.ஓ. உதவியாளர் பேபி வாங்கியுள்ளார். அப்போது, அங்கு பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், விரைந்து வந்து லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. அமல ராணி, உதவியாளர் பேபியை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர், இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article