ஊட்டி: நடிகை சரோஜாதேவி நடித்த ‘புதிய பறவை’ மற்றும் ‘அன்பே வா’ திரைப்படம் நீலகிரியில் எடுக்கப்பட்டு வெற்றிப்படமாக பல நாட்கள் ஓடியது. அவர் மறைந்ததால் நீலகிரியில் அந்த படங்கள் படமாக்கப்பட்டதை ரசிகர்கள் நினைவுகூர்கிறார்கள். கன்னடத்து பைங்கிளி என வர்ணிக்கப்படும் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி (87) நேற்று கர்நாடக மாநிலத்தில் உள்ள அவரது இல்லத்தில் வயது மூப்பு காரணமாக காலமானார். அவர் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்கள் நடித்திருந்தாலும், ‘புதிய பறவை’ மற்றும் ‘அன்பே வா’ திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை. இந்த 2 திரைப்படங்களும் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் எடுக்கப்பட்டது. 2 படங்களும் வெற்றிப்படமாக பல நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது.
‘புதிய பறவை’ திரைப்படம் கடந்த 1964ம் ஆண்டு ஊட்டியில் எடுக்கப்பட்டது. சிவாஜிகணேசனும், சரோஜாதேவியும் நடந்த இந்த திரைப்படத்தில் வரும் ‘‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…’’ என்ற பாட்டும், எம்ஜிஆரும், சரோஜாதேவியும் நடித்து 1966ல் வெளிவந்த ‘அன்பே வா’ திரைப்படத்தில் ‘‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன்…’’ என்ற பாட்டும், ‘‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’’ என்ற பாட்டும் நீலகிரி மாவட்டத்தில் படமாக்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்தவை. ‘‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’’ என்ற பாடல் ஊட்டி தாவரவியல் பூங்காவிலும் ‘‘நான் பார்த்ததில் அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன்…’’ என்ற பாடல் ஊட்டி படகு இல்லம் மற்றும் ஏரியை சுற்றியும், ஊட்டி அருகே உள்ள கால்ப்லிங்ஸ் மைதானத்திலும் படமாக்கப்பட்டது.
‘‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…’’ என்ற பாடல் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மலைகளில் படமாக்கப்பட்டது. ‘புதிய பறவை’ படத்தில் குதிரையில் சவாரி செய்யும் காட்சிகள் ஊட்டியில் உள்ள குதிரை பந்தயம் மைதானத்தில் படமாக்கப்பட்டது. இந்த பாடல்கள் ஒலிக்கும் வரை சரோஜாதேவி மற்றும் நீலகிரியை யாராலும் மறக்க முடியாது என்று ரசிகர்கள் நினைவு கூர்கிறார்கள்.
The post கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவியை நினைவுகூரும் நீலகிரி appeared first on Dinakaran.