சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடி வந்த ஜெகபர் அலி என்ற சமூக ஆர்வலர் கொடூரமான முறையில் சரக்குந்து ஏற்றி படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கி்றது. முதலில் விபத்தாக காட்டப்பட்டு, பின்னர் கொலையாக மாற்றப்பட்ட இந்த வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டிருக்கும் போதிலும் உண்மைக் குற்றவாளிகளை காவல்துறை இன்னும் கைது செய்யவில்லை.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் வெங்கலூரைச் சேர்ந்த ஜெகபர் அலி அப்பகுதிகளில் செயல்பட்டு வரும் சட்ட விரோத குவாரிகளுக்கு எதிராக போராடி வந்தார். அதற்காக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்வது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில்தான் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் தொழுகை நடத்தி விட்டு இரு சக்கர ஊர்தியில் திரும்பும் போது சரக்குந்தால் மோதப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலை நடந்த விதத்தைப் பார்க்கும்போது அது திட்டமிடப்பட்ட ஒன்று என்பது தெளிவாகத் தெரிகிறது.
தமிழ்நாடு முழுவதுமே சட்ட விரோதமாக கனிமங்களை கொள்ளையடிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கும் கும்பல்கள் தனி சாம்ராஜ்யத்தை நடத்தி வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத மணல் கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுத்த கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டின் பல இடங்களில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக இருந்தவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இவ்வளவுக்குப் பிறகும் கனிமவளக் கொள்ளையர்களை தமிழக அரசு கட்டுப்படுத்தாததன் விளைவு தான் ஜெகபர் அலி போன்ற சமூக ஆர்வலர்கள் படுகொலை செய்யப்படுவதில் வந்து முடிந்திருக்கிறது.
ஜெகபர் அலி படுகொலையின் பின்னணியில் இப்போது கைது செய்யப்பட்டிருக்கும் நால்வர் தவிர மேலும் பலர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தக் கொலையின் பின்னணியில் உள்ள முழு சதியையும் வெளிக்கொண்டு வரப்படுவதையும், இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவதையும் உறுதி செய்ய இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.