ஏறக்குறைய எல்லா மனிதர்களுமே தங்களைப் பற்றி குறைவாகத்தான் நினைத்துக் கொள்கிறார்கள்.தங்கள் மூளையை,மனோசக்தியை,தங்கள் ஆற்றலைப் பற்றி குறைவாகவே மதிப்பீடு செய்கிறார்கள்.அவர்கள் துணிந்தால் எதையும் செய்து முடிக்க முடியும் என்பதைப் பற்றி நினைப்பதே இல்லை என்று சொல்கிறார் அறிஞர் ஹெர்பட்என் கேசன்.அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரரான மரடோனா வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். நாம் குள்ளமாக இருக்கின்றோமே என்ற தாழ்வு மனப்பான்மை அவருக்குச் சிறிய வயதில் இருந்ததாம். அதே தாழ்வு மனப்பான்மையோடு அவர் முடங்கி போயிருந்தால் அவரால் வெற்றி பெற்று இருக்க முடியுமா?
சிறிய வயதில் உறவினர்களும்,சுற்றத்தாரும் ‘சின்ன வெங்காயம்’ என்று கேலி செய்யப்பட்ட மரோடோனாதான் 1986 ஆம் ஆண்டு ஜெர்மனியோடு நடந்த உலகக் கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா நாட்டிற்குக் கோப்பையினைப் பெற்று தந்தார்.பிறர் கேலி பேசுகின்றார்களே என்று அஞ்சி நடுங்கித் தாழ்வு மனப்பான்மைக்குள் சிக்கி இருந்தால் அவரால் இந்தச் சாதனை செய்திருக்க முடியுமா? அதனால் எந்த ஒரு நிலையிலும் பிறரைக் கேலியும் கிண்டலும் செய்வதைத் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
கொலம்பஸ் தன் கடற்படை கடற்பயணத்தைத் தொடங்குகின்றார். உலகம் தட்டையானது என்று நம்பிய அக்கால மனிதர்கள் அவரை எச்சரிக்கை செய்தார்கள். அவர் தொடர்ந்து கடல் பிரயாணம் செய்தால் பூமியின் எல்லைக்கு அப்பால் உள்ள சூன்யத்திற்குள் தலைக்குப்புற விழுந்து விடுவார் என்று பயமுறுத்தியும் பார்த்தார்கள். இருப்பினும் அவர் தளராத மனதோடும்,தன்னம்பிக்கையுடன் தன் கடற்பயணத்தைத் தொடர்ந்தார். அதனால் தான் அவரால் ஒரு புதிய நாட்டையே கண்டுபிடிக்க முடிந்தது.தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறிய நாமும் மேற்கொள்ள வேண்டியதுஇதுதான்.இதற்கு உதாரணமாய் கனவுகளை விரிவடையச் செய்து வெற்றி வானில் பறந்த சாதனைப் பெண்மணி ஒருவரைச் சொல்லலாம்.நித்யஸ்ரீ சிவன் ஓசூரில் பிறந்தவர். இவரது தந்தை மற்றும் சகோதரர் என இருவருமே கிரிக்கெட் வீரர்கள் என்பதால், சிறுவயதில் இருந்தே நித்யஸ்ரீக்கும் கிரிக்கெட் மீதே ஆர்வம் இருந்துள்ளது. ஆனால், கடந்த 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியினை தொலைக்காட்சியில் கண்டுகளித்த போது, தனக்கு கிரிக்கெட்டைவிட பேட்மிண்டனில் அதிக ஆர்வம் இருப்பதைக் கண்டுபிடித்தார் அவர்.
மேலும் அப்போட்டியில் விளையாடிய பேட்மிண்டன் வீராங்கனையான லின் டானின் தீவிர ரசிகையாகவும் மாறினார். தொடர்ந்து அவரைப் பற்றிய பல தகவல்களைத் தேடித்தேடிப் படித்தார். அப்போதிருந்து தானும் அவரைப் போல் பேட்மிண்டன் வீராங்கனையாக வேண்டும் என கனவும் காண ஆரம்பித்தார். கனவுகளை நினைவுகளோடு நிறுத்திக் கொள்ளாமல், உடனடியாக நிஜமாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார்.உள்ளூரில் இருந்த அகாடமி ஒன்றில் பேட்மிண்டன் பயிற்சி வகுப்பில் சேர்ந்து விளையாடத் தொடங்கினார். குடும்பப்பொருளாதார நிலையால், அவரால் வாரத்தில் சில நாட்கள் மட்டுமே பயிற்சியில் கலந்து கொள்ள முடிந்தது.நித்யஸ்ரீக்கு பேட்மிண்டன் மீது இருந்த ஆர்வமும், திறமையும் அவரது பயிற்சியாளருக்கு நன்றாகத் தெரிந்தது. எனவே, மேற்கொண்டு அவரை நன்கு பயிற்சி பெற வைத்தால், அவர் எதிர்காலத்தில் பேட்மிண்டன் துறையில் பதக்கங்களை வென்று ஜொலிப்பார் என நித்யஸ்ரீயின் பெற்றோரிடம் அவர் கூறியுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் தலைமை பயிற்சியாளரும் துரோணாச்சார்யா விருது பெற்றவருமான ஸ்ரீ கௌரவ் கன்னாவில் கீழ் தொழில்முறை பயிற்சிக்காக லக்னோ சென்றார் நித்யஸ்ரீ. அதன் தொடர்ச்சியாக, பேட்மிண்டனில் அவருக்கிருந்த ஆர்வம் மற்றும் பயிற்சி, அவரைப் பல போட்டிகளில் கலந்து கொண்டு, பதக்கங்களை வெல்ல வைத்தது.உடல்வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியாக இருந்தபோதும்,ஆரம்பத்தில் அனைவருக்குமான பொதுப் போட்டி களிலேயே கலந்து கொண்டு பலபதக்கங்களைக் குவித்துள்ளார்.இந்த சூழ்நிலையில்தான், 2020ல் லாக்டவுன் காலத்தில்தான், தனது தந்தையின் நண்பரான பாரா பேட்மிண்டன் வீரரின் அறிமுகம் நித்யஸ்ரீக்குக் கிடைத்தது. மாநில அளவிலான பாரா – பேட்மிண்டன் வீரரான அவர் மூலம், பாரா-பேட்மிண்டன் போட்டிகள் பற்றி அவருக்குத் தெரிய வந்தது. பயிற்சியாளரின் ஊக்கத்துடன், நித்யாவின் தந்தை அவரை தமிழ்நாடு பாரா-பேட்மிண்டன் மாநில சாம்பியன்ஷிப்பில் பங்கெடுக்க வைத்தார். அங்கு அவர் தனது திறமைகளை வெளிப்படுத்தத் தொடங்கி, தற்போது பாராலிம்பிக் வரை சென்று வெண்கலப் பதக்கம் வென்று நித்யஸ்ரீ சாதித்துள்ளார்.
பஹ்ரைனில் நடந்த ஆசிய யூத் பாரா கேம்ஸ் 2021ல் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம், டோக்கியோவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் 2022ல் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கங்கள் உட்பட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பல தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் இவர் வென்றுள்ளார்.தற்போது, இந்த வரிசையில் பாரீஸில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கமும் சேர்ந்துள்ளது.நித்ய ஸ்ரீயின் உயரம் மற்றும் உடலமைப்பு காரணமாக, மற்ற பாரா பேட்மிண்டன் வீராங்கனைகளோடு ஒப்பிடுகையில் அவருக்கு சில கூடுதல் சவால்கள் இருந்தன, ஆனால் அந்த சவால்களை துணிச்சலோடு எதிர்கொண்டு சாதித்துள்ளார் நித்யஸ்ரீ சிவன்.உருவக் கேலிகள், அவமானங்கள் மட்டுமல்லாது, உயரம் குறைவாக இருப்பவர்களுக்கு உடல்ரீதியாகவும் பல சவால்கள் இருக்கும். அதையெல்லாம் கடந்துதான், நித்ய ஸ்ரீ இந்த உயரத்தை அடைந்திருப்பதாகக் கூறுகிறார் நித்ய ஸ்ரீயின் தந்தை சிவன்.பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற நித்யஸ்ரீக்கு பிரதமர் மற்றும் தமிழக முதலமைச்சர் ஆகியோர் பாராட்டியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.உயரம் குறைவாக இருந்த போதும் சாதிக்க வேண்டும் என்ற கனவு உயர்வாக இருந்ததால் நித்யஸ்ரீ வெற்றியை வசப்படுத்தியுள்ளார் என்பதில் ஐயமில்லை.
The post கனவுகளே வெற்றியின் திறவுகோல்கள்! appeared first on Dinakaran.