கனமழையை எதிர்கொள்ள தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் - ஜி.கே. வாசன்

2 months ago 14

சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கடலோரப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மைய அறிவிப்பு தெரிவிக்கிறது. இதனால் பல்வேறு மாவட்டப் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மழையோ கனமழையோ பெய்ய வாய்ப்புண்டு. மழைக்காலங்களில் பெய்யும் மழையால் பல இடங்களில் மழைநீர் வடியாமல் குளம் போல் தேங்கியிருப்பதும், வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுவதும், மழைநீர், குடிநீர், கழிவுநீர் கலப்பதும், சாலைகள் பழுதடைவதும், போக்குவரத்து தடைபடுவதும், மக்களின் இயல்பு வாழ்க்கை சிரமத்திற்கு உட்படுவதும் வழக்கமானது.

ஆனாலும் இதனையெல்லாம் வழக்கமானது என்று எடுத்துக்கொள்ளாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கக்கூடாது என்பதற்காக மழைக்காலப் பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள தொடங்க வேண்டும். கடந்த காலத்தில் மழை, கனமழை, அதி கனமழை, புயல், வெள்ளம் ஆகியவற்றால் மக்கள் அனுபவித்த சிரமங்கள், துன்பங்கள் ஏராளம். குறிப்பாக விவசாய நிலங்கள் மழையால், புயலால், வெள்ள நீரால் சேதமடைந்து, பயிர்கள் பாழாகி, விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்தார்கள். மேலும் மக்களும் மழைக்கால நோயினால் பாதிக்கப்பட்டார்கள்.

இப்படி மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக செயல்பட்டால் பெரும் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். பொது மக்களும் பாதுகாப்பின் அவசியத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். பாதுகாப்புக்காக காவல்துறை, மின்சாரத்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை போன்ற முக்கியத் துறைகளின் மூலம் பணியாற்றுபவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்து அவர்களின் பாதுகாப்பான பணிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

எனவே தமிழக அரசு, மழைக்காலத்தில் சென்னை, தென் மாவட்டப் பகுதிகள் என மாநிலத்தில் எங்கு மழை பெய்தாலும் மக்களை, விவசாயத்தை, கால்நடைகளை பாதுகாக்க தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி, மக்களுக்கு துணை நிற்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article